/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகிர்மான கால்வாயில் தனிச்சையாக நீர் நிறுத்தம் :பாசன விவசாயிகள் போராட்டம்
/
பகிர்மான கால்வாயில் தனிச்சையாக நீர் நிறுத்தம் :பாசன விவசாயிகள் போராட்டம்
பகிர்மான கால்வாயில் தனிச்சையாக நீர் நிறுத்தம் :பாசன விவசாயிகள் போராட்டம்
பகிர்மான கால்வாயில் தனிச்சையாக நீர் நிறுத்தம் :பாசன விவசாயிகள் போராட்டம்
ADDED : ஏப் 19, 2024 12:22 AM

குடிமங்கலம்:'கிளை கால்வாயில், நிர்ணயித்த அளவு வழங்காமல், தனிச்சையாக பொதுப்பணித்துறையினர் தண்ணீரை நிறுத்தி விட்டனர்,' என கிருஷ்ணாபுரம் பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், ஜெ. கிருஷ்ணாபுரம் கிளை கால்வாய் வாயிலாக முதலாம் மற்றும் மூன்றாம் மண்டலத்தில், 13,079 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பிரதான கால்வாயில், அரசூர் ஷட்டர் அருகே, இந்த கால்வாய் பிரிந்து, 20 கி.மீ., க்கும் அதிகமான தொலைவு செல்கிறது.
ஏற்கனவே இக்கால்வாயில், தண்ணீர் திருட்டு உள்ளிட்ட காரணங்களால், கடைமடைக்கு போதிய தண்ணீர் செல்லாமல், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.
தற்போது, முதலாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் நேற்று காலை, உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், மூங்கில்தொழுவு பிரிவு அருகே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழித்தடத்தில், போக்குவரத்து பாதித்தது.
விவசாயிகள் கூறியதாவது:
கிருஷ்ணாபுரம் கிளை கால்வாயில், முதலாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டரை சுற்றுகள் தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
பின்னர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், இரண்டு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்படும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவுவதால், நிலைப்பயிர்களை காப்பாற்ற கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணாபுரம் கிளை கால்வாயில், மூன்றாவது பகிர்மான கால்வாயில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், நேற்று காலை தண்ணீரை அடைத்து விட்டனர்.
இந்த கால்வாய்க்கு, 5 நாட்கள் முழுமையாக தண்ணீர் தர வேண்டும். ஆனால், நிர்ணயித்தபடி தண்ணீரை வழங்காமல், பொதுப்பணித்துறையினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
இதனால், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில், நிலைப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. நிர்ணயித்தபடி தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என தெரிவித்தனர்.
தகவல் கிடைத்த போலீசார், உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் தலைமையில், சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரமாகியும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு வரவில்லை.
இதனால், போராட்டம் நேற்று மாலை வரை நீடித்தது. விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில், நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.

