/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறார் பாலியல் வன்முறை தடுக்க விழிப்புணர்வு
/
சிறார் பாலியல் வன்முறை தடுக்க விழிப்புணர்வு
ADDED : மார் 07, 2025 08:14 PM

மேட்டுப்பாளையம்:
காரமடையில் 96 அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி குழந்தைகளிடம் 'குட் டச், பேட் டச்', பாலியல் வன்முறை தடுப்பு போன்ற விழிப்புணர்வுகளை வழங்க உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.
காரமடையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக, காரமடை வட்டார வள மையம் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், காரமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சி, 96 துவக்கப் பள்ளி ஆசிரியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்தும், போக்சோ சட்டம், பாலியல் குற்றங்களில் ஈடுபவர்களுக்கான தண்டனை், பாலியல் குற்றங்கள் நேராமல் மாணவர்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பயிற்சி உளவியலாளர்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:-
ஆசிரியர்கள் இந்த பயிற்சி வாயிலாக, 96 துவக்கப்பள்ளிகளில் உள்ள 14 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். குட் டச், பேட் டச், பாலியல் குற்றம் நடக்கும் இடத்தில் குழந்தைகள் மாட்டிக்கொண்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது, பெற்றோரிடம் சொல்ல தயங்கினால் ஆசியர்களிடம் சொல்லலாம் என குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவார்கள். இதுதவிர பள்ளிகள் அளவில் பள்ளி ஆலோசனை குழு அமைத்துள்ளோம். அவர்கள் மாணவர்கள் மனசு என புகார் பெட்டி ஒன்றினை வைப்பார்கள். மாணவர்கள் மனம் விட்டு பேச முடியவில்லை என்றாலும் புகார் பெட்டியில் புகார் அளிக்கலாம். 1 முதல் 5 வகுப்பு குழந்தைகளுக்கு இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் வாயிலாக அவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதுபோன்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் போது, காவல்துறை, வழக்கறிஞர்கள், கருத்தாளர்கள், உளவியல் ஆலோசகர்கள் ஒன்றிணைந்து காரமடை கல்வி வட்டாரத்தில் செயல்படுகின்றனர்.
அதன் படி கருத்தாளர்களாக ஆசிரியர் சத்யா, பிருந்தா உள்ளனர். உளவியல் ஆலோசகர் அருள்வடிவு, வழக்கறிஞர் கிரண்பேடி, மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எஸ்.ஐ., தங்கமாரி ஆகியோர் ஆசிரியர்களுக்கு அனைத்து விதமான சட்டம், தற்காப்பு, உளவியல் ஆலோசனைகளை வழங்கினர்.
காரமடை வட்டார கல்வி அலுவலர்கள், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சிவசங்கரி பொறுப்பு மேற்பார்வையாளர் மைதிலி உள்ளிட்டோர் இந்த பயிற்சிக்கு தலைமையேற்றனர்.