/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களை புறக்கணிக்கும் பஸ் மாணவ, மாணவியர் அவதி
/
கிராமங்களை புறக்கணிக்கும் பஸ் மாணவ, மாணவியர் அவதி
ADDED : மார் 02, 2025 10:54 PM
கருமத்தம்பட்டி, ; கிராமங்களுக்கு பஸ் வராததால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
உக்கடத்தில் இருந்து அரசூர், பொண்ணாண்டாம்பாளையம், செல்லப்பம்பாளையம், சஙகோதிபாளையம் வழியாக கோழிப்பண்ணை வரை, அரசு டவுன் பஸ் (எண் 90) இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில், அரசூர், செல்லப்பம்பாளையம் பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாக, இந்த டவுன் பஸ் முறையாக இயக்கப்படாததால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து பெற்றோர் கூறியதாவது:
நீலம்பூர், முதலிபாளையம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் அரசூர் மேல்நிலைப் பள்ளிக்கும், பொன்னாண்டாம்பாளையம் பொத்தியாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் செல்லப்பம்பாளையம் அரசு பள்ளிக்கும் சென்று வருகின்றனர்.
இதேபோல், கோழிப்பண்ணை, சங்கோதிபாளையம் பகுதி மாணவர்களும், செல்லப்பம்பாளையம், அரசூர் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பஸ் முறையாக வந்து செல்வதில்லை. இதனால், பஸ்சை நம்பியுள்ள மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்து பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டி உள்ளது.
பள்ளி நேரத்துக்கு பஸ் வராததால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கிராம மக்களும் அவதிப்படுகின்றனர். அதனால், பஸ்சை முறையாக இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.