/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டணம் ஏதுமின்றி உயிர்மச்சான்று பெற அழைப்பு! உதவி இயக்குனர் அறிவிப்பு
/
கட்டணம் ஏதுமின்றி உயிர்மச்சான்று பெற அழைப்பு! உதவி இயக்குனர் அறிவிப்பு
கட்டணம் ஏதுமின்றி உயிர்மச்சான்று பெற அழைப்பு! உதவி இயக்குனர் அறிவிப்பு
கட்டணம் ஏதுமின்றி உயிர்மச்சான்று பெற அழைப்பு! உதவி இயக்குனர் அறிவிப்பு
ADDED : மார் 11, 2025 05:23 AM
பொள்ளாச்சி : 'இயற்கை வேளாண்மையில் பங்கேற்பு உத்ரவாத அமைப்பின் கீழ், சான்று பெற விண்ணப்பிக்கலாம்,' என, விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பங்கேற்பு உத்ரவாத திட்டமானது, 2011ம் ஆண்டு மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் உயிர்மச்சான்று பணிக்காக உருவாக்கப்பட்டது.
விவசாயிகள், நுகர்வோர், விற்பனையாளர்கள், வர்த்தகர்கள் உயிர்ம விவசாயம் செய்ய முன் வருவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் வாயிலாக உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கென உயிர்மச்சான்று பெற, மூன்றாம் தரப்பு சான்றுக்கு மாற்றாக, பங்கேற்பு உத்ரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தின் வாயிலாக, அங்கக பண்ணையம் செய்யும் விவசாயிகள் கட்டணம் ஏதுமின்றி உயிர்மச்சான்று பெறலாம். சான்றிதழ் பெற முதலில், பி.ஜி.எஸ்., இந்தியா போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.
குழு சான்றிதழ் பெற குறைந்தபட்சம், ஐந்து விவசாயிகள் இருக்க வேண்டும் (5 - 100 பேர்). ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் அல்லது பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்களாகவே குழுவாக இணைந்து உயிர்ம விவசாயம் செய்வோம் என உறுதி ஏற்று பங்கேற்கலாம்.
அவ்வாறு ஏற்படுத்தப்படும் குழுக்களுக்கு தலைவர், செயலாளரை தேர்வு செய்து, எண், பட்டா, புகைப்படம் மற்றும் நில விபரங்களுடன் இணையதளத்தின் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன்பின், உரிய ஆவணங்களுடன் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்ட விண்ணப்பத்தை, கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
குழுவிற்கான ஆவணங்களாக, குழு பதிவு செய்யப்பட்ட நகல், விண்ணப்ப படிவம், ஏற்பு இசைவு கடிதம், ஒப்பந்த கடிதம், குறிப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.குழுவில் உள்ள விவசாயிகள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், தனிப்பட்ட விவசாயிகள் விண்ணப்பம் மற்றும் பண்ணையின் குறிப்பு, விவசாயிகளின் உறுதிமொழி சான்று, விண்ணப்பதாரரின் புகைப்படம், ஆதார் நகல், நில ஆவணம், கூட்டுப்பட்டா எனில் தடையில்லா சான்று, வங்கி கணக்கு விபரம் உள்ளிட்டவையாகும்.
மேலும், குழுக்களுக்கு பயிற்சி மற்றும் கள ஆய்வு நடத்தப்படுகிறது. பி.எஸ்.ஜி., இந்தியா சான்றிதழ் பெற ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண்மை உதவி இயக்குனர் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பங்கேற்பு உத்ரவாத திட்டத்தின் வாயிலாக சான்று பெறலாம்.
இத்தகவலை, விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.