/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
/
விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
ADDED : ஜூன் 08, 2024 12:46 AM
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்காக ஒதுக்கப்படும் மனையை, மொத்தமாக கிரையம் வாங்கி ஒருங்கிணைத்து வீடு கட்டுவது விதிமீறல் என்கிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்களில் உள்ள மனையிடத்தை, முழுவதுமாகத்தான் கிரையம் வாங்க வேண்டும்; விற்க வேண்டும். அவ்வாறின்றி, ஒரு மனையை, இரண்டாகவோ, மூன்றாகவோ பிரித்து விற்பது விதிமீறல் என்று, வரைபட அனுமதி நிபந்தனைகளிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், பொதுமக்கள் பலர் அதை பொருட்படுத்தாமல், விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக வாங்குகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட் வரைபடத்துடன், இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை, தெளிவாக படித்த பின்பே மனை வாங்க வேண்டும். அந்த நிபந்தனை படிவத்தை, கிரைய ஆவணத்துடன் இணைத்து பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
விதிமீறல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், அதாவது, கடைநிலை ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற குறைந்த வருவாய் பெறும் நபர்கள் மனை வாங்கி வீடு கட்டிக் கொள்ள, பிரத்யேகமாக ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்களிலும், சில வீட்டு மனைகள் ஒதுக்கப்படுகின்றன. அது, EWS (Economically weaker section) என்று குறிப்பிடப்பட்டு, இரண்டு சென்ட் அல்லது அதற்கு குறைவாக கூட, மனைகள் ஒதுக்கப்படுகின்றன.
இருப்பினும், அதையும் அதிக வருவாய் உள்ள சிலர், இரண்டு சைட்கள் அல்லது மூன்று சைட்களை மொத்தமாக கிரையம் வாங்கி, அதை ஒருங்கிணைத்து வீடு கட்டுகின்றனர்.
இது விதிமீறல். அவ்வாறான சூழ்நிலைகளில் வங்கிக் கடனோ, கட்டட அனுமதியோ பெற இயலாது. சில சமயங்களில், ஆவணம் பதிவு செய்த பின், ஏதாவது பிழை இருப்பினும் கிரையம் எழுதிக் கொடுத்தவரை அணுகி, முறையாக பிழை திருத்த ஆவணம் எழுதி பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறின்றி, சிறு, சிறு பிழைகளை சில சமயங்களில் உரிமையாளர்களே திருத்தம் செய்வதுண்டு; இது ஏற்புடையதல்ல.
யாருக்கெல்லாம் உரிமை
ஆவணத்தின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருந்தால், சார்பதிவு அலுவலகத்தில் சான்றிட்ட நகல் பெற்று புல எண், நான்கு எல்லைகள், அளவுகள் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், செட்டில்மென்ட் ஆவணம் எழுதிக் கொடுப்பவருக்கு, அச்சொத்து சுய சம்பாத்திய சொத்தாகவோ, உயில், பாகப்பிரிவினை மற்றும் செட்டில்மென்ட் ஆகிய ஆவணங்களின் வாயிலாக உரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
அவ்வாறின்றி, பாகம் பிரிபடாத நிலையில் உள்ள பூர்வீக சொத்தாக இருப்பின், மற்ற பாகஸ்தர்களுக்கும் அதில் உரிமை வந்து விடுகிறது.
இவ்வேளைகளில் சொத்து விற்பனை செய்யும் போது, அனைத்து கூட்டு குடும்ப உறுப்பினர்களும் கையெழுத்து இட வேண்டி இருக்கும்.
கணவர் விற்க முடியாது
குடும்பத்தலைவருக்கு, சுய சம்பாத்திய சொத்தாக இருக்கும் பட்சத்தில், அவர் மரணமடைந்து விட்டால், இறந்தவருக்கு, மைனர் குழந்தைகள் (18 வயது பூர்த்தியடையாதவர்கள்) இருக்கும் பட்சத்தில், இறந்தவரின் மனைவி அல்லது கணவர், கார்டியன் என்கிற அடிப்படையில் குழந்தைகளின் பங்கையும் சேர்த்து விற்பனை செய்ய இயலாது.
அவ்வாறு, சொத்து விற்பனை செய்ய வேண்டிய தேவையிருப்பின், உரிய அதிகாரம் படைத்த நீதிமன்றத்தில் (மாவட்ட நீதிமன்றம்) 'கார்டியன் மற்றும் வார்ட்ஸ்' சட்டப்பிரிவின் கீழ், தாயாரோ, தந்தையாரோ, மைனர்களுக்கு சட்டப்படியான கார்டியன் என்ற நியமனம் பெற்ற பிறகே, விற்பனை செய்ய வேண்டும்.
அப்போது, நீதிமன்றம், மைனர்களின் பங்கு கிரைய தொகையை 18 வயது பூர்த்தியடையும் வரையில், நீதிமன்றத்தில் வைப்பீடு செய்ய உத்தரவிடும் வட்டி தொகையை மட்டும் மைனர்களின் பராமரிப்புக்காக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நடைமுறையை பின்பற்றாவிட்டால், மைனர்கள் மேஜரான பின் உரிமை கோரினால், சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பதிவு செய்யப்படாத உயில் வாயிலாக, ஒருவர் உரிமை கோரினால், அதுவும் நீதிமன்றம் வாயிலாக உறுதி செய்ய வேண்டும் அல்லது உயில் எழுதி வைத்தவர் இறந்த பின், இறந்தவரின் அனைத்து வாரிசுகளும் சேர்ந்து தான், விற்பனை செய்ய இயலும். இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 98422 50145.