/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேருக்கு நேர் ஓட்டு சேகரித்த வேட்பாளர்கள்
/
நேருக்கு நேர் ஓட்டு சேகரித்த வேட்பாளர்கள்
ADDED : ஏப் 11, 2024 06:41 AM

ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டு சேகரித்தனர்.
இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான 'ஜாக் கமிட்டி'யினர் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. கோவையில் குனியமுத்துார் ஆயிஷா மகாலில் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில், சுமார் 20 ஆயிரம் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் காலையிலேயே தொழுகை நடக்கும் பகுதிக்கு வந்துவிட்டனர்.
சிறப்பு தொழுகை நடைபெற்றுக்கொண்டு இருந்ததால் இரு கட்சி வேட்பாளர்களும் சுமார் 2 மணி நேரம் காத்திருந்தனர். தொழுகை முடிந்து மக்கள் வரும் போது, சாலையின் ஒரு பக்கம் தி.மு.க., மறுபக்கம் அ.தி.மு.க., என இரு கட்சியினரும் கைகளில் பதாகைகள் ஏந்தி, போட்டி கோஷம் எழுப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இரு கட்சி வேட்பாளர்களும் முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு இஸ்லாமியர்களின் ஆதரவை கோரினர். இதில் அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் சிறிய 'ஸ்டூல்' போட்டு தன் முகம் நன்றாக தெரியும் வகையில் நின்று ஓட்டு போடும்படி கேட்டுக்கொண்டார்.

