/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழைகளுக்கு தானம் செய்து ரம்ஜான் கொண்டாட்டம்
/
ஏழைகளுக்கு தானம் செய்து ரம்ஜான் கொண்டாட்டம்
ADDED : ஏப் 12, 2024 12:31 AM

கோவை:ஏழை, எளிய மக்களுக்கு தானம் செய்து இஸ்லாமியர்கள் நேற்று ரம்ஜான் கொண்டாடினர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ள ரம்ஜான் வரும் மாதம் புனித மாதமாகவும், ஏழை, எளிய மக்களுக்கு உதவி மகிழும் ஒரு மாதமாகவும் உள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் மார்ச், 11ம் தேதி முதல் நோன்பு இருந்து நேற்று பண்டிகையை கொண்டாடினர்.
இதையொட்டி நேற்று காலை 'சதக்கத்துல் பித்தர்' எனப்படும் நோன்புப் பெருநாள் தர்மத்தை ஏழை மக்களைத் தேடிச் சென்று இஸ்லாமியர்கள் அரிசி மற்றும் கோதுமையையும், ரொக்கத்தையும் வழங்கினர்.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூமார்கெட் கப்ருஸ்தான் பள்ளிவாசல், கவுண்டம்பாளையம், மஸ்ஜிதே நுார் பள்ளிவாசல், ஒப்பணக்கார வீதி, இமாம் பாடா மஸ்ஜித், திருமறை நகர், மஸ்ஜிது நுார் சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித், கரும்புக்கடை சுன்னத் ஜமாஅத் மஸ்ஜித், இஸ்லாமியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.
அதன் ஒரு பகுதியாக கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவையில் நேற்று, 33 ஈத் மைதானங்கள் உள்ளிட்ட, 273 பள்ளிவாசல்களில் ஈகைத்திருநாள் சிறப்புதொழுகை நடந்தது. இதில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையை நிறைவு செய்து மகிழ்ந்தனர்.
500 கிலோ பிரியாணி
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வகையில் உக்கடம் ஹவுசிங் யூனிட் கிரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பில் 500கிலோ சிக்கன் பிரியாணி செய்து, ஏழை மக்கள்500பேருக்கு வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

