ADDED : மார் 14, 2025 10:38 PM

வால்பாறை; வால்பாறை அருகே, பயணியர் நிழற்கூரை சிமென்ட் குடோனாக மாறியதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி எஸ்டேட் ரோப்வே. இங்கு நகராட்சி சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பயணியர் நிழற்கூரையில் கட்டுமான பணிக்காக சிமென்ட் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், நிழற்கூரையை பயன்படுத்த முடியாமல், ரோட்டிலேயே காத்திருந்து, மக்கள் பஸ் பயணம் மேற்கொள்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட நிழற்கூரையில், நெடுஞ்சாலைத்துறை பணிக்காக கொண்டு வரப்பட்ட சிமென்ட் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால், நிழற்கூரைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் வரும் வரை கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரையில் வைக்கப்பட்டுள்ள சிமென்ட் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், 40வது கொண்டைஊசி வலைவில் ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக கொண்டு வரப்பட்ட சிமென்ட் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க, வேறு இடம் இல்லாததால், நிழற்கூரையில் வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் சிமென்ட் மூட்டைகள் காலியாகி விடும்,' என்றனர்.