/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவுக்குள் ராட்டினங்கள், ரோப் கார் மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
/
செம்மொழி பூங்காவுக்குள் ராட்டினங்கள், ரோப் கார் மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
செம்மொழி பூங்காவுக்குள் ராட்டினங்கள், ரோப் கார் மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
செம்மொழி பூங்காவுக்குள் ராட்டினங்கள், ரோப் கார் மாநகராட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ADDED : பிப் 27, 2025 09:33 PM

கோவை, ; கோவையில் உருவாக்கப்படும் செம்மொழி பூங்கா வளாகத்தில், குழந்தைகளை ஈர்க்கும் வகையில், ராட்டினங்கள் மற்றும் ரோப் கார் வசதி ஏற்படுத்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்க, ரூ.167.25 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. நுழைவுச்சீட்டு வழங்கும் கட்டடம், திறந்தவெளி அரங்கம், சுற்றுச்சுவர், கழிப்பிடம், உள்ளிட்டவை கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 4,830 சதுர மீட்டர் பரப்பளவில் மாநாட்டு மையம் கட்டப்படுகிறது. உக்கடத்தில் இருந்து கழிவு நீரை சுத்திகரித்து, 6 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதித்து கொண்டு வரப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு, 17 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 'பயோ டெக்னாலஜி' முறையில் கழிப்பறை கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் சேலத்தில் இருந்து கோவை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், விமானம் மூலமாக சென்னை சென்றார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர், விமான நிலையத்தில் சந்தித்து வழியனுப்பினர். அப்போது, செம்மொழி பூங்கா பணிகள் தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் முதல்வர் கேள்வி எழுப்பினார். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ராட்டினங்கள் மற்றும் 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். அதற்கான இடம் ஒதுக்குவது தொடர்பாக, பூங்கா வளாகத்தில், கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''இதுவரை, 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கட்டட பணிகள் மட்டும், 85 சதவீதம் முடிந்திருக்கின்றன. ஜூனுக்குள் முழுமையாக முடிக்கப்படும். முதல்வர் வந்திருந்தபோது, பொழுதுபோக்கு அம்சங்கள் என்னென்ன இருக்கின்றன என கேட்டார். ராட்டினங்கள் அமைக்கப்படுகின்றனவா என கேட்டார். ராட்டினங்கள் மற்றும் ரோப் கார் உள்ளிட்ட சின்ன சின்ன பொழுதுபோக்கு அம்சங்கள் அமைப்பதற்கு இடம் பார்த்திருக்கிறோம். ஆலோசனை வடிவில் இருக்கிறது,'' என்றார்.