ரூ.3 லட்சம் மோசடி
கோவை ராம் நகர், பாரதி வீதியை சேர்ந்தவர் ஸ்ரீ ஷியாம், 40; சிவில் இன்ஜினியர். இவருக்கு சொந்தமான பேன்ஸி ஸ்டோரில், காளீஸ்வரி, 23 என்பவர் பணிபுரிந்தார். ஸ்ரீ ஷியாம், வீடு ஒன்றை காளீஸ்வரிக்கு கட்டிக் கொடுத்தார். அதற்கான தொகை ரூ.83 ஆயிரத்தை காளீஸ்வரி தரவில்லை. இந்நிலையில், ஸ்ரீ ஷியாமின் கிரெடிட் கார்டை, அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி, அதன் வாயிலாக, ரூ.2.25 லட்சத்தை, காளீஸ்வரி தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக எடுத்துள்ளார். ஸ்ரீ ஷியாம் பணத்தை திரும்ப தருமாறு கேட்ட போது காளீஸ்வரி, அவரது தந்தை வேலுசாமி இருவரும் மிரட்டினர். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் இளைஞர் பலி
கோவை தடாகம் ரோடு இடையர்பாளையத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், 18. இவர் தனது நண்பர் கோவை காந்தி நகரை சேர்ந்த பிராங்கிளின் வர்கீஸ், 19 உடன் பைக்கில், சரவணம்பட்டியில் இருந்து வெள்ளக்கிணறு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இருவரும் துாக்கி வீசப்பட்டனர். பிராங்கிளின் வர்கீஸ் மீது லாரியின் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வசந்தகுமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் தர்மபுரி, கடத்துாரை சேர்ந்த முனிரத்தினம், 36 மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
கோவை இருகூர் பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில் புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. புகையிலைப் பொருட்களை மறைத்து வைத்திருந்த கோவை சிறுமுகையை சேர்ந்த ஜெய்கணேஷ், 36 என்பவரை சிறையில் அடைத்தனர்.
மாணவரிடம் போன் பறிப்பு
கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 18; தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தனது நண்பரை பார்க்க ரத்தினபுரி ரூட்ஸ் பாலத்தின் அடியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த இருவர், ரூ.1,000 பணம், மொபைல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். நந்தகுமார் புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.