/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை - அபுதாபி நேரடி விமான சேவை தொடர்கிறது; சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை துவக்கம்
/
கோவை - அபுதாபி நேரடி விமான சேவை தொடர்கிறது; சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை துவக்கம்
கோவை - அபுதாபி நேரடி விமான சேவை தொடர்கிறது; சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை துவக்கம்
கோவை - அபுதாபி நேரடி விமான சேவை தொடர்கிறது; சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை துவக்கம்
ADDED : செப் 17, 2024 11:24 PM
கோவை : கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை தொடர்வதற்கு, விமான போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி. ஏ.,) அனுமதி அளித்துள்ளது.
கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை, வாரத்துக்கு மூன்று நாள் என்ற அடிப்படையில் கடந்த ஆக., 10ம் தேதி முதல், இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது.
மொத்தம் 186 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில், கோவையில் இருந்து 93 சதவீத இருக்கைகள் நிரம்பின. அபுதாபியில் இருந்து 57 சதவீத இருக்கைகள் நிரம்பின.
இதனிடையே, அக்., 29 துவங்கி, மார்ச் 30ம் தேதி வரையிலான குளிர்கால அட்டவணையில், கோவை-அபுதாபி நேரடி விமான சேவை இடம்பெறவில்லை. இது, கோவை தொழில்துறை யினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, கொங்கு குளோபல் போரம் அமைப்பு சார்பில், விமானப் போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், டி.ஜி.சி.ஏ., அனுமதி அளித்துள்ளதால், குளிர்கால அட்டவணையில் கோவை அபுதாபி நேரடி விமான சேவை பட்டியலிடப்பட்டுள்ளது.
அதேசமயம் விமானம் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம், மதியம் 1:40க்கு அபுதாபி சென்றடையும். அபுதாபியில் இருந்து மதியம் 1:05க்கு புறப்பட்டு, மாலை 6:35க்கு கோவை வந்தடையும். இந்த நேரத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
வரும் நவ., முதல் 2025 மார்ச் வரை, டிக்கெட் விற்பனையை இண்டிகோ நிறுவனம் துவக்கியுள்ளது. இதனால், பயணிகள் டிக்கெட் 'புக்' செய்ய முடியும்.
சிங்கப்பூருக்கு நேரடி சேவை
சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவையையும், இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் அக்., 27ம் தேதி முதல், இந்த இடைநில்லா விமான சேவை துவங்குகிறது.
கோவையில் இருந்து இரவு 8:15 மணிக்கு புறப்படும் விமானம், சிங்கப்பூரை அதிகாலை 3:15 மணிக்குச் சன்றடையும். சிங்கப்பூரில் இருந்து மாலை 4:15 மணிக்குப் புறப்படும் விமானம், கோவையை காலை 6:10க்கு வந்தடையும்.
கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ் கூறுகையில், “அபுதாபி நேரடி விமான சேவை குளிர்கால அட்டவணையில் மீண்டும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி. இண்டிகோ நிறுவனம் சிங்கப்பூருக்கு நேரடி விமானத்தை இயக்கவுள்ளது.
இதற்கான முன்பதிவு, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவையில் இருந்து இன்னும் சில இடங்களுக்கு, சர்வதேச விமானங்களை விரைவில் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,” என்றார்.