/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் வன்முறை புகார் விசாரிக்க உள்புகார் குழு அமைக்க வேண்டும்; கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
/
பாலியல் வன்முறை புகார் விசாரிக்க உள்புகார் குழு அமைக்க வேண்டும்; கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
பாலியல் வன்முறை புகார் விசாரிக்க உள்புகார் குழு அமைக்க வேண்டும்; கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
பாலியல் வன்முறை புகார் விசாரிக்க உள்புகார் குழு அமைக்க வேண்டும்; கோவை கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : மே 10, 2024 01:25 AM
கோவை;பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை புகார் குறித்து விசாரிக்க, அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில், உடனடியாக உள்புகார் குழு அமைக்க, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
வேலை செய்யும் இடங்களில், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை தடுக்க, பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடை சட்டம் - 2013 மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும், பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க, அனைத்து அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்புகார் குழு அமைக்க வேண்டும்.
அக்குழு தலைவராக பெண் அலுவலரை நியமிக்க வேண்டும்.
இருவரை உறுப்பினராகவும், இத்துறையில் நன்கு பழக்கமான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை, உறுப்பினராக சேர்க்க வேண்டும். விசாரணைக்கான வழிமுறைகள் இச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு அரசு துறைகள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசு பயிற்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் ஏன, 10 நபர்களுக்கு மேல் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் உடனடியாக, உள்புகார் குழு அமைக்க வேண்டும்.
அதன் விபரத்தை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இக்குழு அமைக்காத நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். குழு அமைத்த நிறுவனங்கள், மாதந்தோறும் பெற்ற புகார்கள் குறித்த அறிக்கையை, மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிச., இறுதிக்குள் ஆண்டு அறிக்கையை, கட்டாயம் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.