/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாற்றாண்டுகளை கடந்து மருத்துவ நகரமான கோவை
/
நுாற்றாண்டுகளை கடந்து மருத்துவ நகரமான கோவை
ADDED : ஜூலை 01, 2024 01:18 AM
கோவை தொழில் நகரம், கல்வி நகரம் போன்று மருத்துவ நகரமாகவும் உருவெடுத்துள்ளது. இருதயம், நரம்பியல், மூளை நரம்பியல், சிறுநீரக கோளாறு, எலும்பு முறிவு, ஆட்டிசம், குடல், இரைப்பை, கண், காது, மூக்கு, தொண்டை என எந்த உடல்நலக் குறைபாடு என்றாலும், பிற மாவட்டம், மாநிலத்தவர்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டினருக்கும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக, கோவை மாறி வருகிறது.
இந்த பெருமைக்கான விதை, 1892ம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டது என்பது தான் அனைவருக்கும் தெரிந்திராத உண்மை.
கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையாக, அறியப்பட்ட கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக உள்ள அரசு மருத்துவமனை, 1892ல் நிறுவப்பட்டது.
ஏறக்குறைய கோவை மருத்துவ துறை, 100 ஆண்டு பழமையை கொண்டது. ஒரு நுாற்றாண்டில் இந்த மருத்துவத் துறை அன்றைய, பிளேக் போன்ற கொள்ளை நோய்களுக்கும், இன்றைய கொரோனா போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கும், தீர்வு கண்டிருப்பது நமக்கு பெருமை.
அலோபதி மருத்துவத்தில், ஒவ்வொரு உறுப்புக்கும் சிகிச்சை அளிக்க தனித்துவம் மிக்க மருத்துவமனைகள் இங்கு இருப்பது தான் தனிச்சிறப்பு.
ஏறக்குறைய, 15க்கும் மேற்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 100க்கும் மேற்பட்ட சிறிய ரக மருத்துவமனைகளும், 1,000 க்கும் மேற்பட்ட கிளினிக்குகளும், மருத்துவ சேவையை திறம்பட மேற்கொண்டு வருகின்றன.
ஓமியோபதியின் சிறப்பு
இது ஒரு புறம் இருக்க, அலோபதி மருத்துவத்துக்கு ஒரு போதும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள், என்பது போல், ஓமியோபதி மருத்துவத் துறையினரும், கோவையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். அலோபதியில் தீர்க்க முடியாத, பல நோய்களுக்கு ஓமியோபதியில் தீர்வு கிடைக்கிறது.
இதுதவிர, நேச்சுரோபதி, யோகா மையங்கள் என, கோவையை சுற்றி மருத்துவம் தொடர்பான மையங்கள் அதிகம். இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் கோவைக்கு மருத்துவ தேவைகளுக்காக வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பஞ்சாப், ராஜஸ்தான், டில்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் என, உயர் மருத்துவ சிகிச்சை முறைகளை கொண்டுள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சர்வதேச அளவில் பெயர் பெற்ற பல மருத்துவ சங்கங்களில், கோவை டாக்டர்கள் உயரிய பொறுப்பில் இருப்பது இவர்களின் திறமைகளுக்கு எடுத்துக்காட்டு.
இப்படி பல மருத்துவத் துறைகளிலும், கோலோச்சி கொண்டிருக்கும் கோவையில், மருத்துவ சுற்றுலா வளர்வது இயல்பான ஒன்றே.