/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காளிபாளையம் கிராமத்தில் தொடரும் பிரச்னை
/
காளிபாளையம் கிராமத்தில் தொடரும் பிரச்னை
ADDED : மார் 12, 2025 11:18 PM
பெ.நா.பாளையம்; பொது கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்வதில் காளிபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பிரச்னை நீடிக்கிறது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளமடை ஊராட்சி, காளிபாளையம் கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
விவசாயக் கூலி வேலைக்கு செல்லும் நபர்கள், அதிக அளவு வசிக்கின்றனர். இங்கு பொது கழிப்பிடம் இல்லாததால், கிராம மக்கள், குறிப்பாக, பெண்கள் இரவு நேரங்களில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் கடந்த, 60 ஆண்டுகளாக நீடிக்கிறது.
இது குறித்து, காளிபாளையம் கிராமத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர் அன்புச்செல்வன் கூறியதாவது:
வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையம், தொட்டிபாளையம், வெள்ளமடை ஆகிய பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. ஆனால், சுமார், 800 குடும்பங்கள் வசிக்கும் காளிபாளையம் கிராமத்தில் பொது கழிப்பிடம் இல்லை.
தினமும் கூலி வேலைக்கு சென்று, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள 300 கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வீடுகளில் தனிநபர் கழிப்பிடங்கள் இல்லை. அவர்கள், இன்றும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், பொதுக் கழிப்பிடம் கட்ட, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது, தமிழக அரசு ஊராட்சிகளின் சார்பில் தனிநபர் கழிப்பிடம் கட்ட, 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அந்தத் தொகையில் கழிப்பிடம் கட்ட இயலாது. குறைந்தபட்சம், 25 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
ஒவ்வொரு லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலின் போதும் பல்வேறு கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள், பிரசாரத்தின் போது, வெற்றி பெற்றால், காளிபாளையத்தில் பொது கழிப்பிடம் கட்டித் தரப்படும் என, உறுதி அளிக்கின்றனர். ஆனால், தேர்வு செய்யப்பட்டவர்கள் இதுவரை அப்பணியை மேற்கொள்ளவில்லை.
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி கழிப்பிடம் கட்ட தயாராக இருப்பதாகவும், அதற்கான இடத்தை தேர்வு செய்தால் நிதி உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால், பொது கழிப்பிடத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் போது, அருகில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இவ்வாறு, சமூக ஆர்வலர் அன்புச்செல்வன் கூறினார்.