தொட்டில் கயிற்றில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் சொக்கலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் தாமோதர கண்ணன், 45. தனியார் டிரைவிங் ஸ்கூலில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி கங்காதேவி, மகன் சஷ்வந்த், 7. கங்காதேவியின் தங்கை கெளசல்யா அவரது குழந்தையுடன் வந்து வீட்டில் தங்கினால், குழந்தைக்கு தொட்டில் தேவைப்படும் என்பதால், வீட்டில் தொட்டில் கட்டி உள்ளனர். இந்த தொட்டில் கயிற்றில் சஷ்வந்த் அடிக்கடி தொங்கி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான்.
இதனிடையே நேற்று முன் தினம் இரவு கங்காதேவி வெளியில் கடைக்கு சென்ற நேரத்தில், தாமோதர கண்ணன் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது சிறுவன் சஷ்வந்த் தொட்டில் கயிற்றில் வழக்கம் போல் விளையாடும் போது, கயிறு கழுத்தில் மாட்டி அந்தரத்தில் தொங்கி மூச்சு திணறி உயிரிழந்தான். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
---போலீசிடம் தகராறு செய்தவர் மீது வழக்கு
துடியலூர் போக்குவரத்து போலீசில் எஸ்.எஸ்.ஐ., யாக பணியாற்றி வருபவர் பிரேம்குமார். இவர் என்.ஜி.ஜி.ஓ., காலனியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக காரில் வந்த சிவசக்தி பாரதி, போக்குவரத்து சிக்னலை மீறி சென்றார். கேள்வி எழுப்பிய எஸ்.எஸ்.ஐ., பிரேம்குமாரிடம், சிவசக்தி பாரதி தகராறு செய்தார்.
இது தொடர்பாக துடியலூர் போலீசார், சிவசக்தி பாரதி மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், இதே சம்பவம் தொடர்பாக ஹிந்து முன்னணி வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்திக், 42, புகாரின் பேரில், நரசிம்மநாயக்கன்பாளையம் முபாரக், 47, மீதும், முபாரக் அளித்த புகாரின் பேரில், ஹிந்து முன்னணியை சேர்ந்த படையப்பா, முருகானந்தம் ஆகியோரின் மீதும் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.