ADDED : ஆக 09, 2026 06:31 PM
பில்லுாருக்கு கீழ் புதிதாக கட்ட வலியுறுத்தல் 3 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க முடியும்
சிறுமுகை: காரமடை அருகே உள்ள பில்லூர் அணையின் கீழ் பகுதியில் உள்ள டமான் பாறை பகுதியில் அணை கட்டினால் 3 டி.எம்.சி., தண்ணீர் 3 ஆண்டுகளுக்கு தேக்கி வைக்க முடியும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுமுகை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், 16ம் தேதி தாயனூர் பகுதியில் நடைபெற உள்ள வாழ்வாதார கோரிக்கை மாநாடு, தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி கூறியதாவது:-
காரமடையில் உள்ள பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆறு வழியாக பவானிசாகர் அணை சென்றடைந்து, அங்கிருந்து காவிரியில் கலந்து கடலில் கலக்கிறது. சுமார் மூன்று முதல் ஐந்து மாவட்டங்கள் இந்த அணையினால் பயன்பெறுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 முதல் 6 முறை வரை பில்லூர் அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் 5 முதல் 7 டி.எம்.சி., தண்ணீர் வரை கடலில் சென்று கலக்கிறது. பில்லூர் அணைக்கு கீழ்ப்பகுதியில் டமான் பாறை என்னும் இடம் உள்ளது. 1975 ஆம் ஆண்டு இப்பகுதியில் அணைக்கட்ட அப்போதைய அரசு மண் பரிசோதனை மேற்கொண்டது. அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, கைவிடப்பட்டது.
அதன்பின்னர் அடுத்தடுத்த வந்த முதல்வர்கள் அணைக்கட்டுவது தொடர்பாக பேசினாலும், திட்டத்தை செயல்படுத்தவில்லை. எனவே தமிழக முதல்வர் விஜய், இப்பகுதியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். இங்கு அணை கட்டினால், 25 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். அது மட்டுமின்றி 3 டி.எம்.சி., தண்ணீரை, 3 ஆண்டுகள் வரை தேக்கி வைத்து பயன்படுத்த முடியும். இதனால் எல் நினோ போன்ற வறட்சியான காலங்களிலும் கூட, மழை இல்லாத போது கூட, நாம் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை இந்த அணையில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இதை சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் சுமார் 1 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். முதல்வர் விஜய் இந்த அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
கேரளாவை போல் பால் உற்பத்தியாளர்களுக்கு, ஒரு லிட்டர் பாலுக்கு ரூ. 50 வழங்க வேண்டும். மாட்டு தீவங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். அத்திக்கடவு அவினாசி இரண்டாம் திட்டத்தில் விடுபட்ட காரமடை ஒன்றிய குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண்டும். தேங்காய் கிலோவுக்கு ரூ.50 வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை இந்த கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளோம். நடைபெற உள்ள மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு எங்களது கோரிக்கைகளை தெரியப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் பெரியசாமி மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
---
