/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை விவசாயத்தால் தேங்காய் தரமான வளர்ச்சி
/
இயற்கை விவசாயத்தால் தேங்காய் தரமான வளர்ச்சி
ADDED : செப் 03, 2024 01:59 AM
கிணத்துக்கடவு;தென்னை விவசாயத்தில், தேங்காய் வளர்ச்சிக்கு மீன் அமிலம் பயன்படுத்தலாம் என இயற்கை விவசாயி மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிணத்துக்கடவு சுற்று வாட்டார பகுதிகளில், 13 ஆயிரம் ஹெக்டேர் அளவில் தென்னை பரப்பு உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தென்னைக்கு ரசாயன உரத்தை பயன்படுத்துகின்றனர். இதை தவிர்த்து இயற்கை உரத்தில் தேங்காய் வளர்ச்சி குறித்து, இயற்கை விவசாயி மாரிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
தென்னங்கன்று நடவு செய்யப்பட்டதில் இருந்து, தொடர்ச்சியாக மீன் அமிலம் கொடுக்க வேண்டும். இதனுடன் அவ்வப்போது ஜீவாமிர்தம், பஞ்சகவ்ய கரைசல், கடலை புண்ணாக்கு கரைசல், சாம்பல் கரைசலை தொடர்ச்சியாக கொடுத்தால் தென்னை ஆரோக்கியமாக வளர்ச்சி அடையும். இதனால் காய்ப்பு திறன் அதிகரிக்கும்.
தென்னை மரத்தின் வேரில், 10 முதல் 100 மில்லி வரை மீன் அமிலத்துடன் சம அளவு தண்ணீர் கலந்து கட்ட வேண்டும். இதனால் தேங்காயின் தரம், சுவை மற்றும் எடை அளவு அதிகரிக்கும். இதன் வாயிலாக காய்களை சந்தைப்படுத்தும் போது விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது. தென்னையை தவிர்த்து, வாழை மற்றும் காய்கறி பயிர்களின் வளர்ச்சிக்கு மீன் அமிலம் உதவுகிறது.
இயற்கை உரத்தை குறைந்த செலவில் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும். மேலும், இந்த இயற்கை உரங்களை விவசாயிகளே தயாரித்து பயன்படுத்தலாம், என்றார்.