ADDED : ஆக 23, 2024 09:07 PM
கோவை:கோவை மாநகராட்சி மேற்கு மற்றும் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 72வது வார்டு ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் 'ஸ்வட்ச் பாரத் மிஷன்' திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் பொதுக்கழிப்பிடம், 45வது வார்டு சாயிபாபா காலனி, குப்பகோணாம்புதுார் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை மற்றும் யோகா பயிற்சி மையம் உட்பட பல பகுதிகளை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணாம்பதி குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை விரைந்து அகற்ற, பொறியியல் பிரிவினருக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், பேபி சுதா, குமுதம், ராமமூர்த்தி, கதிர்வேலுசாமி, உதவி கமிஷனர்கள் சந்தியா, ஸ்ரீதேவி உட்பட பலர் உடன் சென்றனர்.