/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் திட்டங்களில் குளறுபடி: தீர்வு காண வலியுறுத்தல்
/
குடிநீர் திட்டங்களில் குளறுபடி: தீர்வு காண வலியுறுத்தல்
குடிநீர் திட்டங்களில் குளறுபடி: தீர்வு காண வலியுறுத்தல்
குடிநீர் திட்டங்களில் குளறுபடி: தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஜூன் 26, 2024 09:39 PM
உடுமலை : திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு செயல்படும், கூட்டு குடிநீர் திட்டங்களை முறையாக இயக்கவும், தரமான குடிநீர் வழங்கவும் வேண்டும், என மனு அளிக்கப்பட்டது.
உடுமலை தாலுகா அலுவலகத்தில், வாளவாடி உள் வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் வழங்கிய மனு:
திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திட்ட பராமரிப்பில் நிர்வாக குளறுபடி காரணமாக, கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட, குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை.
சுத்திகரிப்பு மைய இயக்கம் முழுவதும் தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், போதிய அளவு பணியாளர்கள் நியமிக்காமல், 24 மணி நேரம் இயங்க வேண்டிய குடிநீர் திட்டங்கள், குறைந்த நேரம் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மேலும், அங்குள்ள நீர் தேக்க தொட்டிகள், சுத்திரிகரிப்பு இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், தரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
அதே போல், ஊராட்சி, பேரூராட்சிகளிலுள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், குடிநீர் தொட்டி பராமரிப்பு குறித்து, உள்ளாட்சி அமைப்புகள் கண்டு கொள்வதில்லை.
இதனை, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒன்றிய அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.
தரமற்ற குடிநீர் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போல், குடிநீரில் 'குளோரினேசன்' செய்வதிலும், கணக்கு இல்லாமல், அதிகளவு செய்யப்படுகிறது. முறையான இயந்திரங்கள், கணக்கீடு இல்லாமல், இவ்வாறு கலக்கப்படுகிறது.
எனவே, குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படவும், தரமான குடிநீர் வினியோகத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
உடுக்கம்பாளையத்திலிருந்து, புங்கமுத்துார் செல்லும் ரோடும், குண்டலப்பட்டி செல்லும் ரோட்டையும், தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோடுகள் பராமரிப்பின்றி, குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால், விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, இந்த இரு சாலைகளையும் புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.