ADDED : ஆக 23, 2024 12:38 AM

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், 13.57 கோடி ரூபாய் செலவில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் மின்பாதை, 24 பெட்டிகள் நிறுத்த பெரிய பிளாட்பார்ம், புதிய டிக்கெட் புக்கிங் அலுவலகம், நடைபாதை மேம்பாலம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், 75 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி பணிகளும், வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அமிர் பாரத் திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த, 13.57 கோடி ரூபாயை, ரயில்வே நிர்வாகம் ஒதுக்கியது. இதில் ஸ்டேஷனின் பழமை மாறாமல், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பிளாட்பாரத்தில் பயணிகள் நிழல் கூடங்கள், பூங்கா, கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் ஸ்டாண்டு, கான்கிரிட் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், பயணிகள் சிரமம் இல்லாமல் செல்ல லிப்டும், இரண்டு எஸ்க்லேட்டர் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மொத்தமாக மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன், முன்மாதிரியான ரயில்வே ஸ்டேஷனாக மாற்றப்படும் பணிகள் நடை பெறுகின்றன.
இந்நிலையில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, உதவிக்கோட்ட மேலாளர் சிவலிங்கம், வணிக மேலாளர் பூபதி ராஜா ஆகியோர், சேலத்தில் இருந்து, சிறப்பு ரயிலில் மேட்டுப்பாளையம் வந்தனர். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்று வரும் அமிர் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர். பின்பு, ஒப்பந்ததாரரிடமும், ரயில்வே அதிகாரிகளிடமும் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தனர். இப்பணிகள் அனைத்தும் எப்போது முடிக்கப்படும் என கேட்டபோது, ஒப்பந்ததாரர் அக்டோபர் மாதத்திற்குள் முடிப்பதாக கூறினர்.
அதற்கு கோட்ட மேலாளர் சின்ஹா விரைவாக பணிகளை முடிக்க வேண்டும் என, கூறினார். முன்னதாக மேட்டுப்பாளையம் வந்த சேலம் கோட்ட மேலாளர், உதவி கோட்ட மேலாளர், வணிக மேலாளர் மற்றும் அதிகாரிகளை, மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.