/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் பரிசோதனை செய்யுங்க! வேளாண்துறை அறிவுறுத்தல்
/
மண் பரிசோதனை செய்யுங்க! வேளாண்துறை அறிவுறுத்தல்
ADDED : ஏப் 28, 2024 11:33 PM
சூலுார்:'மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தினால், அதிக மகசூல் பெறலாம்' என, வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
சூலுார், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தென்னை, வாழை மற்றும் காய்கறி விவசாயம் அதிகளவில் நடக்கிறது. முதல்முறை நல்ல மகசூல் கிடைத்தால், மறுமுறை மகசூல் குறைந்து விடுவதால், விவசாயிகள் விரக்தி அடைவது தொடர்கதையாக உள்ளது.
வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: அதிகளவில் கார, அமில, உவர் நிலை இல்லாமல், நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே நல்ல வளமான மண்ணாகும். உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்களை தொடர்ந்து சாகுபடி செய்வதால், பிரதான சத்துக்கள் அதிகளவில் மண்ணில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். அதனால், மறுமுறை பயிரிடும் பயிர், சத்துக்கள் இன்றி மகசூல் குறைந்து விடும்.
மேலும், ரசாயன உரங்களை அதிகளவில் தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை மாறிவிடும். தொழு உரம், பசுந்தாள் உரம், தழை உரம் ஆகியவற்றை இடுவதை குறைத்து கொள்வதால் மண்ணின் வளம் குன்றி விடும்.
அதனால், மண் பரிசோதனை செய்து, என்ன சத்து அதிகம் உள்ளது, என்ன சத்து குறைவாக உள்ளது என்பதை ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தினால், மகசூல் சீராக இருக்கும். மண் பரிசோதனை செய்ய, வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

