/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ-நாம் திட்டத்தில் இடைத்தரகர் இன்றி கொப்பரை ஏலம்
/
இ-நாம் திட்டத்தில் இடைத்தரகர் இன்றி கொப்பரை ஏலம்
ADDED : மே 10, 2024 01:50 AM

- நிருபர் குழு -
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ஒரு கிலோ கொப்பரை ரூ.90.16க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 17 விவசாயிகள், 2,250 கிலோ அளவுள்ள, 45 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், 9 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.88.21 முதல், ரூ. 90.16 வரையும், இரண்டாம் தரம், ரூ. 62.13 முதல், 85.21 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.
ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
இங்கு விவசாய விளை பொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. மறைமுக ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்குரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஏலத்தில், கடந்த சில வாரங்களாக, கூடுதல் விலை கிடைக்கிறது. விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கூறினார்.
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார்.
அதில், முதல் தர கொப்பரை, 55 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 90 ரூபாய் முதல், 96.21 ரூபாய் வரை விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 62 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 65.55 முதல், 81.29 ரூபாய் வரை விலை கிடைத்தது.
மொத்தம், 117 கொப்பரை மூட்டைகளை, 15 விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆறு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.
இந்த வாரம், 4.949 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 52.65 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இத்தகவலை, விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.