/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்குத் தேவைப்படும் சூழலியல் அறிவு
/
மாணவர்களுக்குத் தேவைப்படும் சூழலியல் அறிவு
ADDED : பிப் 27, 2025 09:27 PM
கடந்த 2022-ல் ஐக்கிய நாடுகள் அவை நடத்திய ஆய்வில் 70 சதவீத மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை; காலநிலை மாற்றம் குறித்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
காலநிலை குறித்த முக்கிய அம்சங்களாக ஐ.நா., பரிந்துரைப்பது, காலநிலை அறிவியல், சூழலியல் மற்றும் உயிர்ப் பன்மையம், காலநிலை நீதி, கார்பன் நீக்கப் பொருளாதாரம், நிலையான வாழ்வியல்முறை ஆகியவை ஆகும்.
வரும் 2030க்குள் உலக நாடுகள் அனைத்திலும் 90 சதவீதக் கல்விக்கொள்கைகள் சூழலியல் சார்ந்து மாற்றப்பட வேண்டும், குறைந்தது 50 சதவீதப் பள்ளிகளை பசுமைப்படுத்த வேண்டும் என ஐ.நா., அறிவுறுத்தியுள்ளது.
அதீத கனமழை, நிலச்சரிவு, வறட்சி, காட்டுத் தீ, நோய் பரவல் எனப் பேரிடர்கள் ஒருபக்கம் நம்மைச்சூழ்கின்றன.
காலநிலை அறிவை மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும். இது, சூழலியலை மையப்படுத்துவதாக அமைய வேண்டும். உள்ளூர் தாவரங்கள், விலங்குகள், சமூக கட்டமைப்புகள், பண்பாடுகள் ஆகியவற்றின் பார்வையில் முன்னெடுப்புகளை வடிவமைப்பது மாணவர்களுக்கு எளிதில் பிணைப்பை ஏற்படுத்தும். அன்றாடத்தில் நாம் காணும் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை சிறு குறிப்பேட்டில் பதிவு செய்துஅதை விவாதிக்க வைக்கலாம். கதையாகச் சொல்லலாம்.
அனுபவ பயிற்சியாக, அருகில் இருக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அருங்காட்சியகம், பூங்காக்கள், நீர்நிலைகள் போன்றவற்றில் மாணவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம். மாணவர்கள் கற்பித்தலில் ஈடுபடும்போது அவர்களுக்குண்டான புரிதலும் மேம்படும். அதற்கேற்றவாறு விளையாட்டுகள், போட்டிகளை வடிவமைக்கலாம்.
சூழல் மன்றங்கள்
பள்ளிகளில் சூழல் மன்றங்கள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் காலநிலை விழிப்புணர்வை மாணவர்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க இயலும். சூழல் மன்றங்கள் பள்ளியையும், சமூகத்தையும் இணைக்கும் பாலமாக அமைகின்றன.
அங்கன்வாடி குழந்தைகளுக்குச் செடிகள் நடுவது, விலங்குகளைப் பார்வையிடுவது போன்ற இயற்கை சார்ந்த நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும்போது இயற்கையுடனான உறவு, ஆர்வம், பொறுப்பு ஆகியவை வளர்த்தெடுக்கப்படும்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்குண்டான தொடர்பு, நடுநிலைப் பள்ளியில் சூழலியல் நீதி, நிலையான வளர்ச்சி திட்டக் கொள்கைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு, உயர்நிலைப் பள்ளியில் அதற்கு ஏற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அமல்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில், 2023-ல் பசுமைப் பள்ளித் திட்டம் கொண்டுவரப்பட்டது. பள்ளிகளில் காய்கறி தோட்டம், நீர் மேலாண்மை, நெகிழிக்குறைப்பு போன்ற திட்டங்கள் இதன் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. முறையான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, சூழலியல் மன்றங்களுக்கு எனத் தனித்துவமான குழுக்கள் ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.
பகுப்பாய்வுகளைச் செய்து, அதற்கேற்ற செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். மதிப்பாய்வு செய்ய வேண்டும்.