/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்தில் கழிவுநீர் ; கிராம மக்கள் முற்றுகை
/
குளத்தில் கழிவுநீர் ; கிராம மக்கள் முற்றுகை
ADDED : ஆக 07, 2024 11:33 PM

அன்னுார் : கஞ்சப்பள்ளி, எருக்கலாம் குளத்தில், கழிவுநீர் கலக்க திட்டமிட்டுள்ளதை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில், 95.5 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கலாம் குளம் உள்ளது. இக்குளத்தில் 9.57 ஏக்கர் நிலம் பேரூராட்சியைச் சேர்ந்த குன்னத்தூராம் பாளையத்தில் உள்ளது. மீதமுள்ள 86 ஏக்கர் கஞ்சப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 6வது நீரேற்று நிலையத்தை ஒட்டி இந்த குளம் அமைந்துள்ளது. மழை நீர் மற்றும் அத்திக்கடவு நீரால் இக்குளம் நிரம்பி உள்ளது. அன்னுார் பேரூராட்சியில், சத்தி ரோடு, தர்மர் கோவில் வீதி, இட்டேரி வீதியில் சேரும் கழிவு நீரை குன்னத்தூராம்பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்து தூய்மையான நீரை குழாய் வழியாக எருக்கலாம் குளத்தில் விட பேரூராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று கஞ்சப்பள்ளி, ஊத்துப்பாளையம், தாச பாளையம், நீலகண்டன் புதூர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், தாசில்தார் குமரி ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் ஆகியோரை முற்றுகையிட்ட கிராம மக்கள் ஆவேசத்துடன் கூறியதாவது : 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 95 ஏக்கர் குளம் நிரம்பியுள்ளது. இதுவரை 1200 அடி ஆழத்தில் நீர் எடுத்து வந்தோம். தற்போது 200 அடியில் நீர் வருகிறது. தரிசாக இருந்த நிலத்தில் பலரும் விவசாயம் செய்ய துவங்கி விட்டனர்.
கழிவுநீர் குளத்தில் கலந்தால் தற்போது அன்னுார் குளத்தில் எப்படி கழிவுநீர் அதிகமாகி மாசுபட்டுள்ளதோ அதே நிலை எருக்கலாம் குளத்துக்கும் ஏற்படும். நிலத்தடி நீர் மாசுபடும். விவசாயம் செய்ய முடியாது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி துவங்கினால், 10 கிராம மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செயல் அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில், பல பேரூராட்சிகளில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் வெற்றிகரமாக செயல்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரில் ஒரு சதவீதம் கூட மாசு இருக்காது. நீங்கள் வந்தால் சில பேரூராட்சிகளுக்கு அழைத்துச் சென்று செயல் விளக்கம் காட்டுகிறோம், என்றார்.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், கிழக்கே தான் சரிவு உள்ளது. எனவே கழிவு நீர் மற்றும் மழை நீர் சரிவை நோக்கி தான் செல்லும். முழுமையாக சுத்திகரித்த பின்பே வெளியேறும், என்றார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முற்றுகை காரணமாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.