/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்பூசணி, வெள்ளரி பயிரிட தயங்கும் விவசாயிகள்
/
தர்பூசணி, வெள்ளரி பயிரிட தயங்கும் விவசாயிகள்
ADDED : மே 01, 2024 12:09 AM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே சாமநாயக்கன்பாளையம், வெள்ளமடை பகுதிகளில் மயில்கள் தொல்லையால், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட கோடைகால பழங்களை, பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், வெள்ளமடை பகுதிகளில் ஆண்டுதோறும் தர்பூசணி, வெள்ளரிக்காய் பயிரிடப்படும்.
மயில்கள் தொல்லையால் வழக்கம்போல இந்த ஆண்டும் தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்ட கோடைகால பழங்களை பயிரிட விவசாயிகள் முன் வரவில்லை.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில்,'நீர் தேங்காத நிலத்தில் தர்பூசணியை பயிரிடலாம். பொதுவாக நவ., மாதத்தில் பயிரிடப்படும் தர்பூசணி ஜன., பிப்., மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும். இவை ஜூன், ஜூலை மாதம் வரையில் விற்பனையில் இருக்கும்.
பொதுவாக இப்பழங்கள் ஐந்து முதல், 12 கிலோ வரை எடை இருக்கும். சாதாரணமாக, 90 நாட்களில் முழுமையாக வளர்ந்து விடும். தர்பூசணி பழ சாகுபடி நேர்த்தியாக செய்தால், ஏக்கர் ஒன்றுக்கு பத்து முதல், 15 டன் விளைச்சல் எதிர்பார்க்கலாம். தமிழகத்தை விட, கேரளாவில் இப்பழத்துக்கு கிராக்கி அதிகம்.
ஆனால், கோவை வடக்கு பகுதியில், மயில்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால், விவசாயிகள் இப்பழத்தை பயிரிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விதைக்கும் போதே, விதைகளை உண்ண மயில்கள் வந்து விடுகின்றன. அதையும் மீறி, காய்கனிந்து பழங்கள் உற்பத்தியானால், மயில்கள் பழங்களை ஓட்டை போட்டு சேதப்படுத்தி விடுகின்றன.
சாதாரணமாக பழங்களை பாதுகாக்கவும், பூச்சி, வண்டு நோய் தாக்காமல் இருக்க, வேளாண்துறை அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறது. ஆனால், மயில்களிடமிருந்து பழங்களை காக்க, எவ்வித யோசனையும் வழங்க முன் வருவது இல்லை. மயில்கள், வனத்துறை சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பறவைகள் பட்டியலில் இருப்பதால், அதை விரட்டவோ அல்லது வேறு விதமான நடவடிக்கை எடுக்கவோ இயலாத நிலை உள்ளது.
இப்பிரச்னைக்கு வேளாண் மற்றும் வனத்துறையினர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தர்பூசணி, வெள்ளரி மட்டுமில்லாமல், தக்காளி உள்ளிட்ட பயிர் ரகங்களையும், எதிர்காலத்தில் விவசாயிகள் பயிரிட முடியாத சூழல் ஏற்படலாம்' என்றனர்.