/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையில் தயாராகும் உரம்; இமாச்சல் குழுவினர் பார்வை
/
குப்பையில் தயாராகும் உரம்; இமாச்சல் குழுவினர் பார்வை
குப்பையில் தயாராகும் உரம்; இமாச்சல் குழுவினர் பார்வை
குப்பையில் தயாராகும் உரம்; இமாச்சல் குழுவினர் பார்வை
ADDED : மார் 06, 2025 10:24 PM
கோவை; மக்கும் குப்பையில் நுண்ணுயிரி உரம் தயாரிப்பதை, இமாச்சல் பிரதேசத்தில் இருந்து வந்துள்ள குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இமாச்சல் பிரதேசம் சொலான் மாநகராட்சி மேயர் உஷா சர்மா, கமிஷனர் ஏக்தா ஹப்தா மற்றும், 16 கவுன்சிலர்கள் கொண்ட குழுவினர், கள பயணமாக கோவை மாநகராட்சிக்கு வந்துள்ளனர். நம் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக, அதிகாரிகள் விளக்கினர்.
மாநகராட்சிக்கு எந்தெந்த வகைகளில் வருவாய் ஈட்டப்படுகிறது; சொத்து வரி, காலியிட வரி, குப்பை வரி மற்றும் குத்தகை இனங்கள் வசூலிப்பது, ஆண்டு வருவாய் தொடர்பான விபரங்களை, மாநகராட்சி வருவாய் அலுவலர் மதுசூதனன் விளக்கினார். நகரமைப்பு பிரிவின் செயல்பாடுகளை நகரமைப்பு அலுவலர் குமார் விளக்கினார்.
அதன்பின், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை வளாகத்தில் மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டனர். காய்கறி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் நடைமுறையை அங்குள்ள ஊழியர்கள் விளக்கினர். ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மாநகராட்சி பணிகள் எவ்வாறு கண்காணிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்படுகிறது என்கிற விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
அதன்பின், இமாச்சல் குழுவினர், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றனர். நேற்று முன்தினம் ஈஷாவுக்கு சென்று வந்தனர்.
'பயோமைனிங்' பணி துவக்கம்
வெள்ளலுாரில், 697.97 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 150 ஏக்கர் பரப்புக்கு குப்பை கொட்டப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைந்திருப்பதால், 'பயோமைனிங்' முறையில் அழிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக, 9.40 லட்சம் கன மீட்டர் பழைய குப்பை அழிக்கப்பட்டு, 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, மத்திய அரசின் 'துாய்மை இந்தியா 2.0' திட்டத்தில், வெள்ளலுார் குப்பை கிடங்கில், ரூ.54.85 கோடியில் திடக்கழிவுகளை பிரித்தெடுத்து 'பயோமைனிங்' முறையில் சுழற்சி செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில், ஏழு லட்சத்து, 43 ஆயிரத்து, 287 மெட்ரிக் டன் பழைய குப்பை கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது; 84.62 ஏக்கர் நிலம் மீட்கப்படும்.இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.