ADDED : பிப் 15, 2025 06:47 AM
ஆனைமலை; ஆனைமலை அருகே கோட்டூர் பேரூராட்சியில், குப்பைக்கிடங்கு அருகே புறம்போக்கில் கொட்டப்பட்ட குப்பையில் தீப்பிடித்தது. இது,மாந்தோப்பில் பரவியதால், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆனைமலை அருகே கோட்டூர் பேரூராட்சி குப்பைக்கிடங்கு, ஆழியாறு செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த குப்பைக்கிடங்கு அருகில் புறம்போக்கு இடத்தில் கொட்டி வைக்கப்பட்ட குப்பையில் திடீரென தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
அதில், அருகே உள்ள சிலரது மாந்தோப்பில், பரவியதால், 30 மாமரங்களின் அடிப்பகுதியும் தீ பிடித்தது. பின்னர், அருகே உள்ளவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
இந்நிலையில், குப்பைக்கிடங்கில் மட்டும் குப்பையை கொட்டாமல் மற்ற இடங்களில் வீசுவதால், தீ விபத்து ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பேரூராட்சி குப்பைக்கிடங்கில் மட்டும் குப்பையை கொட்டாமல், விவசாய நிலங்கள் அருகே உள்ள புறம்போக்கு நிலங்களிலும், கொட்டி தீ வைக்கப்படுகிறது. இதனால், அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் அருகே வசிப்போருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு தொந்தரவும் ஏற்படுகிறது. அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.
எனினும் இப்பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது இதுபோன்று பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். பேரூராட்சி நிர்வாகம், குப்பைக்கிடங்கில் மட்டும் குப்பையை கொட்ட அறிவுறுத்த வேண்டும்.
மேலும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட, அதிகாரிகள் நடவடிக்கை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானு, பேச்சு நடத்தி குப்பையை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.