/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவசமாக தண்ணீர் வினியோகம்; சமூக ஆர்வலர் தாராளம்
/
இலவசமாக தண்ணீர் வினியோகம்; சமூக ஆர்வலர் தாராளம்
ADDED : மே 12, 2024 11:13 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் இல்லாததால், இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புச்செல்வன், தனது சொந்த செலவில், ஆழ்குழாய் கிணறு அமைத்து, சிறு லாரி வாயிலாக, பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து, சமூக ஆர்வலர் அன்புச்செல்வன் கூறுகையில், வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமடை, காளிபாளையம், சாமநாயக்கன்பாளையம் பகுதிகளில், 11 ஆழ்குழாய் கிணறுகள் இருந்தன. பில்லூர் குடிநீர் திட்டம் துவக்கப்பட்ட போது, பொதுமக்களின் அனைத்து தேவைகளுக்கும், பில்லூர் குடிநீர் போதுமானதாக இருந்தது. இதனால், பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகள் பராமரிக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டன.
தற்போது பில்லூர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னையை உடனடியாக சமாளிக்க, எனக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து, சிறு லாரியில் டாங்க் வைத்து, காலை, மாலை தலா, 8000 லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். பில்லூர் குடிநீர் தாராளமாக கிடைக்கும் வரை இப்பணி தொடரும் என்றார்.