/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை மேம்படுத்தணும்! ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
/
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை மேம்படுத்தணும்! ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை மேம்படுத்தணும்! ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை மேம்படுத்தணும்! ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை
ADDED : செப் 02, 2024 02:10 AM
பொள்ளாச்சி;'கடந்தாண்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க அனுமதி அளிக்கப்படும்,' என, விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான, விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடப்பாண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வரும், 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, ஊர்வலங்கள் நடத்துதல், விநாயகர் சிலைகள் கரைப்பது குறித்து ஆலோசனை கூட்டம், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடம், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளர்களிடம் இருந்தும் அல்லது அரசு புறம் போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை ஆகிய அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட தடையின்மை சான்று வேண்டும்.
சம்பந்தப்பட்ட போலீசாரிடம் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த அனுமதி கடிதம் பெற வேண்டும். தீயணைப்பு அலுவலரிடமிருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிலை அமைவிடம் தீ தடுப்பு வசதிகளை கொண்டுள்ளது என்பதற்கான சான்று, தற்காலிக மின் இணைப்பு பெற, மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்திடம் ஒப்புதல் கடிதம் ஆகியவற்றுடன், படிவம் 1 பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
சிலைகள் முழுவதும் களிமண்ணால் தயாரிக்கப்பட்டதாகவும், இயற்கை வண்ணங்கள் பூசப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ரசாயன சாயங்கள் பயன்படுத்தப்படக்கூடாது. இது குறித்து கண்காணிக்க வேண்டும்.
உரிய அனுமதி பெற்ற பின்பே சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அரசால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவான பூஜை நேரங்களில் ஒலி பெருக்கிகளை, காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்த இடங்கள், விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு, வெடி பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும்.
விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக மின்சாரம் எடுக்க கூடாது. சிலை வைக்கும் இடத்தில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது வகுப்புவாத தலைவருக்கும் ஆதரவாக பிளக்ஸ் அமைக்க கூடாது. இதை அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கு போலீசாரால் நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும். பொள்ளாச்சி பகுதியில் அம்பராம்பாளையத்திலும், ஆனைமலையில் மயிலாடும்பாறை பகுதியிலும், கோமங்கலத்தில், பி.ஏ.பி., கால்வாய்களிலும் சிலைகளை விசர்ஜனம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகள், 10 அடி உயரத்துக்கு மேல் இருக்க கூடாது. சிலை விசர்ஜனத்துக்கு முன்பும், பின்பும் நீரின் தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.