/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்
/
வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்
வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்
வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று கொண்டாட்டம்
ADDED : செப் 10, 2024 02:29 AM

பொள்ளாச்சி, ஆனைமலையில், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி பகுதியில் ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், மொத்தம், 227 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
வால்பாறை சரகத்தில், 266 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்றுமுன்தினம் முதல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
நேற்று பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 90 சிலைகள் ஆங்காங்கே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோமங்கலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, ஒன்பது சிலைகள், கெடிமேடு பி.ஏ.பி., கால்வாயில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
வால்பாறை சரகத்துக்கு உட்பட்ட ஆனைமலையில் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 110 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்த சிலைகள், ஆனைமலையில் உப்பாறு, மயிலாடுதுறை பகுதியில் கரைக்கப்பட்டன.
பொள்ளாச்சி பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, ஹிந்து முன்னணி சார்பில் கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. ஹிந்து முன்னணி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.
கிணத்துக்கடவில் இருந்து, 33 சிலைகளும், நெகமத்தில் இருந்து 25 சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதில், கிணத்துக்கடவு பகுதியில் 3 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. மற்ற சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் கரைக்கப்பட்டன.
உடுமலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உடுமலை, குடிமங்கலம் பகுதிகளில், கடந்த, 7ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று, விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. உடுமலை நகரின் பல்வேறு பகுதிகளில், 44 சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து, கல்பனா திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரதீப் தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் சண்முகம், ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசினார்.
கோட்டச்செயலாளர் கிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ்., பொள்ளாச்சி மாவட்டத்தலைவர் கோபால், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல், எஸ்.வி., புரம் பகுதியில், பிரதிஷ்டை செய்யபட்டிருந்த, 24 சிலைகள், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
குடிமங்கலம் பகுதியில், 33 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிலையில், மாவட்ட பொதுச்செயலாளர் உதயகுமார் தலைமையிலும், தளி, எரிசனம்பட்டி பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த, 32 சிலைகள், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
சிலைகள் அனைத்தும், உடுமலை பொதுக்கூட்டம் முடிந்ததும், மடத்துக்குளத்தில் அமராவதி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.