/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமையாக மாறியுள்ள அரசு பள்ளி: பெற்றோர் மகிழ்ச்சி
/
பசுமையாக மாறியுள்ள அரசு பள்ளி: பெற்றோர் மகிழ்ச்சி
ADDED : ஆக 29, 2024 02:42 AM

கூடலுார் : கூடலுார் புளியாம்பாறை ஊராட்சி பள்ளி வளாகம் பூச்செடிகள், அழகு தாவரங்களால் பசுமையாக காட்சி தருவது பெற்றோரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
கூடலுார் புளியாம்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 34 பழங்குடி மாணவர்கள் உட்பட, 162 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். புளியம்பாறை ஆற்றை ஒட்டி இயற்கை சூழலில் அமைந்துள்ள இப்பள்ளி வளாகம், முன்னாள் தலைமை ஆசிரியர் சுனில்குமார், ஆசிரியர்கள் முயற்சியினால், மாணவர்கள் பெற்றோர் ஒத்துழைப்புடன் வளர்க்கப்பட்டு பராமரித்து வரும் பூச்செடிகள், அழகு தாவரங்களால் பசுமையான இயற்கை சூழலாக மாறி உள்ளது.
மேலும், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பள்ளி கட்டடங்கள், வகுப்பறைகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வண்ண ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. இப்பள்ளி வளாகத்தில் நுழையும் போது காணப்படும் இயற்கை சூழல் பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெற்றோர் கூறுகையில், 'இப்பள்ளியில், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அதிகளவில் கல்வி பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் முயற்சியால் இப்பள்ளி வளாகம் மற்றும் கட்டடங்கள், தனியார் பள்ளி போன்று பராமரித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள பூச்செடிகள் அழகு தாவரங்கள் மாணவர்களுக்கு மகிழ்ச்சியுடன் படிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, இங்கு பணியாற்றி சென்ற தலைமை ஆசிரியர் சுனில் குமார் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்,' என்றனர்.