/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு பரவல் தடுக்க சுகாதார துறை நடவடிக்கை
/
டெங்கு பரவல் தடுக்க சுகாதார துறை நடவடிக்கை
ADDED : மே 13, 2024 11:41 PM
கோவை:கோடை மழையால், டெங்கு பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை தீவிரப்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசு உற்பத்தி ஏற்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வழி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் அருணா கூறியதாவது:தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதால் ரோடுகள், தெருக்கள் ஆகிய பொது இடங்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும்.
வீடுகளை சுற்றியுள்ள டயர், ஆட்டுக்கல், டின்கள், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயின்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரக, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் பாதித்த இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரக பகுதிகளில், 66, நகராட்சியில், 6, மாநகராட்சியில் 20 வார்டுகள் டெங்கு அதிகம் பாதித்த இடங்களாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

