/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிரோடு விளையாடும் உயர்மின் கம்பிகள்!
/
உயிரோடு விளையாடும் உயர்மின் கம்பிகள்!
ADDED : ஜூன் 10, 2024 01:35 AM

துரத்தும் நாய்கள்
ஒலம்பஸ், 80 அடி ரோடு, நேருநகர், மூன்றாவது வீதியில், கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகள், முதியவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சுகின்றனர்.
- செல்வி, ஒலம்பஸ்.
துர்நாற்றம் தாங்கல!
சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் எதிரில், ஆர்.வி.எல்., காலனி மேற்கு பகுதியில், பல மாதங்களாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யவில்லை. கால்வாயில் குப்பை அடைத்து கழிவுநீர் நிரம்பி நிற்கிறது. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- செந்தில்குமார், சிங்காநல்லுார்.
'ஆள் விழுங்கும்' சாக்கடை
போத்தனுார் புதுவீதியில், சாலையோரம் சாக்கடை கால்வாயின் சிலாப் உடைந்து திறந்த நிலையில் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சாக்கடை கால்வாயில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், மண் சாலையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக உள்ளது.
- ஆண்டனி, போத்தனுார்.
விபரீத விளையாட்டு
கொடிசியா ரோடு - தண்ணீர்பந்தல் வரை, இ.பி.,அலுவலகம் முதல் எஸ் பெண்ட்வரை, இரவு நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக்கில் ரேஸ் போன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர். போலீசார் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளை தடுக்க வேண்டும்.
- லோகநாதன், பீளமேடு.
'துாங்குது' பூங்கா!
கோவை மாநகராட்சி, 19வது வார்டு, வீர கேரளம் தென்றல் நகரில், மாநகராட்சி பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளதால், மக்களால் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. குப்பை, புதர்மண்டி இருப்பதுடன், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
- தங்கவேல், வீரகேரளம்.
'உசிரோடு' உரசல்!
ஆவாரம்பாளையம், இளங்கோ நகர், ஏழாவது வீதியில், மரக்கிளைகள் உயர் மின்அழுத்த கம்பியில் உரசும்படி உள்ளது. மழைக்காலங்களில் வேகமாக காற்று வீசும்போது, மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்ஒயர்களில் உரசும் மரக்கிளைகளைவெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
- மணி, இளங்கோ நகர்.
அசுர வேகம்
சவுரிபாளையம், உடையாம்பாளையம், அத்வைத் பள்ளி அருகே திருப்பத்தில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன், விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வராஜ், சவுரிபாளையம்.
வேகம் இல்லை... சோகம்!
திருச்சி ரோடு, சுங்கம் அருகே பாதாள சாக்கடை கால்வாய் பணிகள், கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் பணியால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
- பழனியப்பன், சிங்காநல்லுார்.
வீணாகும் தண்ணீர்
வடவள்ளி, நியு தில்லை நகர், ஏழாவது தெருவில், கடந்த 10 நாட்களாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலையில் பெருமளவு தண்ணீர் வீணாவது குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- கதிர்வேல், வடவள்ளி.
தொட்டால் 'ஷாக்'
ரேஸ்கோர்ஸ் நடைபாதையில், மின்கம்பங்களின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் திறந்தநிலையில் உள்ளது. மிகவும் தாழ்வாக உள்ளதால் குழந்தைகள் தொடுவதற்கு வாய்ப்புள்ளது. புகாருக்கு பின் வெறும் அட்டையைக் கொண்டு மூடினர். தற்போது, அட்டை விழுந்து மீண்டும் திறந்தநிலையில் உள்ளது.
- யுவராஜ், திருமகள்நகர்.
இருளில் தவிக்கும் மக்கள்
மதுக்கரை மார்க் கெட் - பாலத்துறை ரோடு, கலைவாணி கல்லுாரி அருகில் இருந்து, மேப்பிள் கார்டன், பாலாஜி நகருக்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி இல்லை. நாய் தொல்லை, திருடர்கள் நடமாட்டத்தால், இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.
--ரிஷப், மேபிள் கார்டன்.

