/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை குறைபாடுகளுக்கு உடனே தீர்வு! 'ஆன்லைன்' கூட்டத்தால் நடவடிக்கை
/
மருத்துவமனை குறைபாடுகளுக்கு உடனே தீர்வு! 'ஆன்லைன்' கூட்டத்தால் நடவடிக்கை
மருத்துவமனை குறைபாடுகளுக்கு உடனே தீர்வு! 'ஆன்லைன்' கூட்டத்தால் நடவடிக்கை
மருத்துவமனை குறைபாடுகளுக்கு உடனே தீர்வு! 'ஆன்லைன்' கூட்டத்தால் நடவடிக்கை
ADDED : மார் 03, 2025 12:23 AM
பொள்ளாச்சி; மருத்துவ பணிகள் இயக்ககம் வாயிலாக நடத்தப்படும் மாதாந்திர கூட்டத்தில், பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதால், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் மாறி வருகிறது.
தமிழகத்தில், மருத்துவ பணிகள் இயக்குநர் தலைமையில் 'ஆன்லைன்' வாயிலான கூட்டம், பிரதி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படுகிறது. இதில், அந்தந்த மாவட்ட கலெக்டர், மருத்துவ பணிகள் மாவட்ட இணை இயக்குநர், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.
அப்போது, மத்திய, மாநில அரசுகளின் சுகாதார சேவைகள், மகப்பேறு நலன், குழந்தைகள் நலன், அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற மருத்துவ சேவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
அதில், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களின் தனித்திறன் தரவுகள் கேட்டறியப்படுகிறது. அச்சூழலில், எவரேனும் மருத்துவ உபகரணங்கள், பயிற்சிகள், கூடுதல் டாக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை குறிப்பிட்டால், உடனே தீர்வு காணப்பட்டும் வருகிறது.
இது குறித்து, மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும், ஒன்றாம் தேதி, அந்நத்த அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்த விபரம், மருத்துவ பணிகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதையடுத்து, 5ம் தேதிக்குள், 'ஆன்லைன்' வாயிலாக மாதாந்திர கூட்டம் நடத்தப்படுகிறது.
அதில், குறிப்பாக, ஒவ்வொரு டாக்டர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை, உள் மற்றும் புற நோயாளிகளுக்கான சிகிச்சை குறித்து, கேட்டறியப்படுகிறது.
அதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அதற்கேற்ப நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட டாக்டர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதால், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு சமீபகாலமாக திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.