/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டே ஆண்டில்...! ஒரு லட்சம் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை: இலக்கு நிர்ணயித்தது மாநகராட்சி சுகாதாரப்பிரிவு
/
இரண்டே ஆண்டில்...! ஒரு லட்சம் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை: இலக்கு நிர்ணயித்தது மாநகராட்சி சுகாதாரப்பிரிவு
இரண்டே ஆண்டில்...! ஒரு லட்சம் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை: இலக்கு நிர்ணயித்தது மாநகராட்சி சுகாதாரப்பிரிவு
இரண்டே ஆண்டில்...! ஒரு லட்சம் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை: இலக்கு நிர்ணயித்தது மாநகராட்சி சுகாதாரப்பிரிவு
UPDATED : செப் 06, 2024 06:09 AM
ADDED : செப் 06, 2024 03:05 AM

கோவை:கோவை நகரப் பகுதியில் சுற்றித்திரியும் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு இரு ஆண்டுகளுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீதிகளில் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. பெண்கள், குழந்தைகள் வெளியே சுதந்திரமாக நடமாட முடியவில்லை. கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வரும்போது, அவர்களை தெருநாய்கள் துரத்திச் சென்று பிடுங்கி விடுகின்றன. அச்சமான சூழல் நிலவுவதால், அவற்றை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டுமென, கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அறிவுறுத்தல்
தனியார் அமைப்புகள் மூலமாக, மாநகராட்சியில் உள்ள, 100 வார்டுகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதில், ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 074 தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, மூன்று நாட்கள் பாதுகாத்து, பிடித்த இடத்திலேயே மீண்டும் விடுவதற்கு தனியார் அமைப்புகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தியது.
உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகம், ஒண்டிப்புதுார், சீரநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் இதற்கான மையங்கள் செயல்படுகின்றன. ஒரு நாய்க்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய, 1,650 ரூபாய் வரை செலவாகிறது; மாநகராட்சியோ, 700 ரூபாயே வழங்கியது. பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்ததால், தனியார் அமைப்புகளால் குறிப்பிட்ட நாட்களுக்குள் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதுநாள் வரை சுமார், 10 ஆயிரம் நாய்களுக்கே சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தெருநாய் பெருக்கம் அதிகரிக்கக் கூடும் என்பதால், அறுவை சிகிச்சை செய்வதற்கான கட்டணத்தை மாநகராட்சி உயர்த்தியிருக்கிறது.
அறுவை சிகிச்சை
தற்போது மூன்று தன்னார்வ அமைப்புகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாதத்துக்கு சராசரியாக 600 - 700 தெருநாய்களுக்கே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மையமும் இனி, 1,500 - 2,000 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதம், 2,000 நாய்கள் வீதம் ஆண்டுக்கு, 66 ஆயிரம் என கணக்கிட்டால், இரு ஆண்டுகளுக்குள் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை சிகிச்சை செய்து, இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி நகர் நல அலுவலர் (பொ) பூபதி கூறுகையில், ''கோவை மாநகராட்சியில், ஒரு லட்சத்து, 11 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில், 10 ஆயிரம் நாய்களுக்கே கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் மூன்று அமைப்புகள் ஈடுபடுகின்றன. மாதம் 2,000 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து விடலாம் என இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்,'' என்றார்.