/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடையில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
/
காரமடையில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு
ADDED : ஜூன் 10, 2024 11:56 PM

மேட்டுப்பாளையம்:காரமடையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
காரமடை நகரில், காரமடை - மேட்டுப்பாளையம் சாலை, காரமடை - அன்னூர் சாலை, காரமடை - தோலம்பாளையம் சாலை, காரமடை - சிறுமுகை சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் சாலையோர கடைகள், தள்ளுவண்டி, கடைகளின் முன்பக்கம் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
மேலும் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் காரமடை வழியாக மேட்டுப்பாளையம் வருகின்றனர். இதுதவிர வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தமாக வருவோர், உள்ளூர் வாசிகள் என அனைவரும் நகரின் இச்சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. தினமும் பல நூற்றுக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். அதே போல் காரமடை மேற்கு பகுதியில் உள்ள தோலம்பாளையம் சாலையில் தொழில்நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இந்த தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருள், உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்ல என நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கண்ணார்பாளையம் சாலை வழியாகவும், சிறுமுகை சாலை வழியாகவும், கோவையில் இருந்தும் காரமடை நகர் பகுதிக்கு வந்து செல்கின்றன. கனரக வாகனங்கள் காரமடை நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகளால் வாகனங்களை திருப்பக்கூட முடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற முழு நடவடிக்கை எடுத்துள்ளோம். கடைகாரர்களிடம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் முன்பகுதிகளை அகற்ற அறிவுறுத்தியுள்ளோம், என்றனர்.
இதுகுறித்து காரமடை நகராட்சி பா.ஜ., கவுன்சிலர் விக்னேஷ் கூறுகையில், 'அரங்கநாதர் கோவில் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகளை விரிவாக்கம் செய்த வியாபாரிகள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது.ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்,'என்றார்.----

