ADDED : ஜூன் 28, 2026 04:21 PM
புதிய திடக்கழிவு மேலாண்மை பணிகள்... துாய்மை பணியாளர் சம்பளம் உயருமா?
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில், புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளை கடைப்பிடிக்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், துாய்மைப்பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமாகும் என்கின்றனர் முன்னாள் ஊராட்சி தலைவர்கள். கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மையை கடைப்பிடிக்க, தனித்தனியே கூடாரம் அமைக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சில கிராமங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பல கிராமங்களில், இன்றளவும் திடக்கழிவு மேலாண்மை முறையாக கடைபிடிப்பதில்லை. பெரும்பாலான மக்கள் அனைத்து வகை குப்பையும் ஒன்றாக, பிளாஸ்டிக் கவரில் கட்டி ரோட்டோரம் வீசுகின்றனர்.
சில பகுதிகளில் குவியலாக உள்ள குப்பைக்கு தீ வைக்கப்படுகிறது. இதனால், புகைமூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச கோளாறும், பொது சுகாதாரமும் கடுமையாக பாதிக்கிறது.
இது போன்ற செயல்களை தவிர்க்க, தமிழக அரசு நடப்பு ஆண்டு ஏப்., 1 முதல் திடக்கழிவு மேலாண்மையில் மாற்றம் கொண்டு வந்தது.
இதில், குப்பையை நான்கு வகையாக தரம் பிரிக்க அறிவுறுத்தியுள்ளது. இதை எளிதில் நினைவுபடுத்தும் வகையில், நான்கு நிறங்களில் குப்பைத்தொட்டி அமைத்து குப்பை சேகரிக்கப்படுகிறது.
இதில், பச்சை நிறத்தில் மீதமான உணவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள் போன்ற மக்கும் குப்பையை சேகரிக்க வேண்டும். நீல நிற தொட்டியில், காகிதம், பிளாஸ்டிக் கண்ணாடி உலோகம், துணி உள்ளிட்ட மக்காத குப்பையை சேகரிக்க வேண்டும்.
சிவப்பு நிற தொட்டியில், பழைய பேட்டரிகள், பெயின்ட் மூடிகள், ரசாயன பாட்டில்கள் போன்ற அபாயகரமான கழிவை சேகரிக்க வேண்டும். கருப்பு நிற தொட்டியில், உபயோகப்படுத்திய டைபர், நாப்கின், பேண்டேஜ், முகக்கவசம், கையுறை போன்ற சுகாதாரக்கழிவை சேகரிக்க வேண்டும்.
இது சாத்தியமானால், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும், நோய்கள் பரவுவது தடுக்கப்படும், சுத்தமான கிராமங்கள் உருவாக்கப்படும், மறுசுழற்சி வாயிலாக இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும்.
மேலும், மக்கும் கழிவில் இயற்கை உரம் தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
திடக்கழிவு மேலாண்மையில் குப்பையை தரம் பிரிப்பது குறித்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் மட்டுமே இதை முழுமையாக செய்திட முடியாது.
மேலும், ஈரக்கழிவு இதர குப்பைகளோடு கலந்து வருவதால், பணியாளர்கள் குப்பையை தரம் பிரிக்க சிரமம் ஏற்படுகிறது. முறையாக குப்பையை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்கினால் மட்டுமே இது சாத்தியமாகும். இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்படுகிறது,
இவ்வாறு, கூறினர்.
முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் கூறியதாவது:
ஊராட்சிக்கு வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு, மாதம் தோறும், 5 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. தினமும், வீடு தேடிச்சென்று குப்பை சேகரிக்கும் நபருக்கு இந்த சம்பளம் மிகவும் குறைவு. எனவே, அரசு இதை கவனித்து சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன், பிளாஸ்டிக் குப்பையை பிரித்து வழங்குபவர்களுக்கு, பணம் வழங்கப்படும் என, சில ஊராட்சி அலுவலகத்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதை மக்கள் அனைவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
திடக்கழிவு மேலாண்மை நல்ல திட்டமாக இருந்தாலும், இதற்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இவ்வாறு, கூறினர்.
