/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகிழ்ச்சியும், சோகமும்! உயரத்தை தொடும் ஊட்டி கேரட்; சரிவை சந்திக்கும் உருளைக்கிழங்கு
/
மகிழ்ச்சியும், சோகமும்! உயரத்தை தொடும் ஊட்டி கேரட்; சரிவை சந்திக்கும் உருளைக்கிழங்கு
மகிழ்ச்சியும், சோகமும்! உயரத்தை தொடும் ஊட்டி கேரட்; சரிவை சந்திக்கும் உருளைக்கிழங்கு
மகிழ்ச்சியும், சோகமும்! உயரத்தை தொடும் ஊட்டி கேரட்; சரிவை சந்திக்கும் உருளைக்கிழங்கு
ADDED : மார் 02, 2025 11:59 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சந்தையில் ஊட்டி கேரட் விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், ஊட்டி உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியடைந்து வருவதால், விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி சந்தைக்கு கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி, நீலகிரி மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளும் கொண்டு வருகின்றனர்.
சீசனை பொறுத்து, சில சமயங்களில் வடமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. நீலகிரி மாவட்டம், ஊட்டி, கேத்தி, கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கேரட்டுகள், மேட்டுப்பாளையம் சந்தைக்கு அதிக அளவில் வருகின்றன.
அதேபோல், டில்லி மற்றும் கர்நாடகாவில் இருந்து கேரட் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி கேரட்டுகளின் விலை ஏறாமல் ரூ.30 முதல் ரூ.45 வரையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை ஏறி வருகிறது. கோடை காலம் நெருங்க நெருங்க விலை ஏறும். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரத்து குறைவு
விவசாயிகள் கூறுகையில், ''கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை உயராமல் விற்பனை ஆகி வந்தது. தற்போது விலை ஏற துவங்கிவிட்டது. ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரட் விதைப்பு காலம் துவங்கி பல இடங்களில் விதைப்பு முடிந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் கேரட் அறுவடை செய்யப்படும்போது, அதிகப்படியான வரத்து இருக்கும். தற்போது மிகவும் குறைந்த அளவிலான வரத்து தான் உள்ளது. இச்சமயத்தில் டிமாண்ட் நிலவும் விலை ஏறும்,'' என்றனர்.
உருளும் உருளை
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள, நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் அதிகபட்சமாக, 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை விற்பனை ஆனது. தற்போது, ரூ.1,300 முதல் ரூ.1,650 வரை குறைந்து விற்பனையாகி வருகிறது. நேற்று மூட்டை ஒன்று ரூ.1,620க்கு விற்பனையானது. நாளுக்கு நாள் ஊட்டி உருளைக்கிழங்கு விலை குறைந்து வருவதால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர். இதேபோல், முட்டை கோஸ் விலை கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ ரூ.4 முதல் ரூ.8 வரை மட்டுமே விற்பனை ஆகிறது.
ஊட்டிக்கு 'கிராக்கி'
தற்போது தினமும் ஊட்டி, டில்லி, கோலாரில் இருந்து கேரட் வருகிறது. ஊட்டி கேரட், 50 வண்டிகளில், 500 டன் வரை வருகிறது. டில்லி கேரட், 50 டன் வரை வருகிறது. கோலார் கேரட் 60 டன் வரை வருகிறது. ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 55 வரை; கோலார் கேரட் கிலோ ரூ. 12 முதல் ரூ. 15 வரை; டில்லி கேரட் ரூ. 25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி மற்றும் டில்லி கேரட்டுகளை தான், கேரள வியாபாரிகள் பெரிதும் விரும்பி வாங்குகின்றனர். இதனால், ஊட்டி கேரட் விற்பனை சூடுபிடித்துள்ளது.
- ராஜா, வியாபாரி,
மொத்த காய்கறி மார்க்கெட்,மேட்டுப்பாளையம்.