/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தையாறு பாலம் பணி வேகம் பெற எதிர்பார்ப்பு
/
காந்தையாறு பாலம் பணி வேகம் பெற எதிர்பார்ப்பு
ADDED : மே 03, 2024 11:02 PM

மேட்டுப்பாளையம்:காந்தை ஆற்றின் குறுக்கே கட்டப்படும், பாலம் கட்டும் பணிகள், மழைக்காலத்துக்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிறுமுகை அருகே லிங்காபுரத்திற்கும், காந்தவயலுக்கும் இடையே, காந்தை ஆற்றின் குறுக்கே, 15.40 கோடி ரூபாய் செலவில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றின் குறுக்கே, 168 மீட்டர் நீளம், 9.95 மீட்டர் அகலத்தில் பாலமும், பாலத்தின் இரண்டு புறம், 75 மீட்டர் நீளத்துக்கு நடைபாதையும், சாலையும் அமைக்கப்பட உள்ளன.
உயர் மட்ட பாலம் அமைக்க, ஆற்றின் குறுக்கே ஆறு இடங்களில் தூண்கள் கட்டப்பட உள்ளன. இதில் மூன்று துாண்களும், பாலத்தின் இரண்டு பக்கம் அபர்மென்ட் தடுப்பு சுவர்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பாலம் கட்டும் பணிகளில் ஈடுபட்டவர்கள், தேர்தலில் ஓட்டு போட அவர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், கடந்த இரண்டு வாரங்களாக பணிகள் நடைபெறாமல் நின்றிருந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கான்கிரீட் போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
காந்தவயல் மக்கள் கூறுகையில், 'காந்தை ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டும் பணிகள் அடிக்கடி தொய்வடைந்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, அதிகமான ஆட்களை வைத்து, ஆற்றின் குறுக்கே கட்டப்பட இருக்கும், இரண்டு தூண்களையும், பாலத்தையும் விரைவாக கட்டி முடிக்க வேண்டும்.
அதற்கான நடவடிக்கையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்' என்றனர்.