/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதளி, நேந்திரன் வாழை விலை உயர்வு
/
கதளி, நேந்திரன் வாழை விலை உயர்வு
ADDED : மே 19, 2024 10:46 PM

மேட்டுப்பாளையம்:கதளி, நேந்திரன் வாழை, கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே, அன்னூர் சாலையில் தென்திருப்பதி நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மையம் செயல்படுகிறது.
இங்கு ஒவ்வொரு ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார்கள் ஏலம் நடைபெறும். காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, அன்னூர், பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து, வாழைத் தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று இந்த மையத்தில் நடந்த ஏலத்தில், கதளி, நேந்திரன் ஆகிய வாழை ஒரு கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறியதாவது:
ஏல மையத்துக்கு, 1,200 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். வாழைத்தார்களின் எண்ணிக்கை குறைவாக வந்ததால், வியாபாரிகள் இடையே போட்டி ஏற்பட்டது.
இதனால் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் கதளி, நேந்திரன் வாழை கிலோவுக்கு ஐந்து ரூபாயும், மற்ற வாழைத்தார்கள் ஐம்பது ரூபாய் வரை உயர்வாக விலை கிடைத்தது.
கதளி ஒரு கிலோ, குறைந்த பட்சம், 35 அதிகப்பட்சம், 40 ரூபாய்க்கும், நேந்திரன், 30 லிருந்து, 35 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவன் ஒரு தார் குறைந்தபட்சம்,150 ரூபாய்க்கும், அதிகபட்சம், 500 ரூபாய்க்கும், ரஸ்தாளி குறைந்தபட்சம், 200க்கும், அதிகபட்சம், 600க்கும், தேன் வாழை, 100 லிருந்து, அதிகபட்சம், 550 ரூபாய்க்கும் ஏலம் போனது.
செவ்வாழை குறைந்தபட்சம், 250க்கும், அதிகபட்சம், 750க்கும், மொந்தன், 200 க்கும், அதிகபட்சம், 350 க்கும், பச்சைநாடன் குறைந்தபட்சம், 200 க்கும், அதிகப்பட்சம், 400 க்கும், ரோபஸ்டா குறைந்தபட்சம், 150 ரூபாய்க்கும், அதிகபட்சம், 350 ரூபாய்க்கும் விற்பனையானது.
திருமண முகூர்த்தம் அதிகம் உள்ளதால், வாழைத்தார்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், வாழையின் விலை உயர்ந்து உள்ளது.
நேற்று நடந்த ஏலத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, வட கேரளம் ஆகிய பகுதிகளில் இருந்து, 21 வியாபாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

