/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவுக்கு தனி குடிநீர் திட்டம் தேவை! சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை
/
கிணத்துக்கடவுக்கு தனி குடிநீர் திட்டம் தேவை! சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை
கிணத்துக்கடவுக்கு தனி குடிநீர் திட்டம் தேவை! சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை
கிணத்துக்கடவுக்கு தனி குடிநீர் திட்டம் தேவை! சிறப்பு கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2024 10:50 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, தனி குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சிகளில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து சிறப்பு கூட்டம், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமையில் நடந்தது. இதில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுவேதா சுமன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஸ்குமார், விஜய்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் குடிநீர் பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சிகளும் உள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனை சரி செய்ய கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் மேலும் சிரமம் ஏற்படும், என்றனர்.
ஊராட்சி பகுதிகளில் தற்போது அதிகப்படியான மின்கம்பங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இது பற்றி மின் வாரியத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் முறையான பதில் அளிப்பதில்லை. மேலும், கம்பம் இருப்பு இல்லை என தெரிவிக்கின்றனர்.
ஊராட்சிகளில் பணியாற்றும் வாடர்மேன்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது. அவர்களுக்கு, 'அன் அக்கவுண்ட்' முறையில் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. இதனால் தலைவர்கள் தவறு செய்யும் வாய்ப்பை அரசே தூண்டுகிறது, என, தலைவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் தரப்பில் பேசுகையில், 'குடிநீர் குழாய்கள் உடைப்பு மற்றும் வினியோகிக்கும் போது ஏற்படும் மின்தடை போன்ற காரணங்களால், குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வரும் காலங்களில் இதை சரி செய்து சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
மின்வாரிய அதிகாரிகள் பேசுகையில், 'மின் கம்பம் தற்போது இருப்பு இல்லாததால் ஊராட்சிகளில் மின் கம்பம் மாற்ற காலதாமதம் ஏற்படுகிறது. மின் கம்பம் இருப்பு வந்தவுடன் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மாற்றப்படும்,' என்றனர்.
இறுதியாக எம்.பி., பேசியதாவது:
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதித்ததில், குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து மற்ற பிரச்னைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும்.
மேலும், ஒன்றியத்தில் உள்ள பிரச்னைகளை பட்டியலிட்டு முக்கிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
தற்போது இப்பிரச்னைகளை தற்காலிகமாக சரி செய்ய அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் குடிநீர் வினியோக பணிகள் மேற்கொள்ளும் போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், வேறு ஒரு திட்டத்தில் நிதி ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் சேவை நோக்குடன் பணி புரிய வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.