/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குருத்தோலை ஞாயிறு; கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
/
குருத்தோலை ஞாயிறு; கிறிஸ்தவர்கள் ஊர்வலம்
ADDED : மார் 24, 2024 11:44 PM

மேட்டுப்பாளையம்:புனித அந்தோணியார் மற்றும் சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ ஆலயங்களில், குருத்தோலை பவனி நடைபெற்றது.
குருத்தோலை ஞாயிறு என்பது, இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள், வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்வை, நினைவு கூறுவதாகும். இந்த குருத்தோலை ஞாயிறை, கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். தவக்காலத்தில் கடைசி வாரம், புனித வாரமாக கருதப்படுகிறது.
இந்த புனித வாரத்தின் துவக்க நாள் குருத்தோலை ஞாயிறு ஆகும். மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலயத்தின் சார்பில், குருத்தோலை ஞாயிறு வழிப்பாடானது, காரமடை சாலையில் உள்ள ஜி.எம்.ஆர்.சி., பள்ளி வளாகத்தில் நடந்தது.
பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் குருத்தோலைகள் மீது தீர்த்தம் தெளித்து மந்திரித்தார். அதன் பின் பக்தர்களுக்கு குருத்தோலைகள் வழங்கப்பட்டன. பங்கு பாதிரியார் முன்னே செல்ல, அவரை தொடர்ந்து, பங்கு மக்கள் குருத்தோலையை கையில் ஏந்தி, காரமடை சாலை, பஸ் ஸ்டாண்ட், ஊட்டி சாலை வழியாக புனித அந்தோணியார் ஆலயத்திற்கு பவனியாக வந்தனர். சி.எஸ்.ஐ., ஆலயத்தில் துவங்கிய இந்த பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அன்னூர், சத்தி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயத்தில், இருந்து ஆயர் சுவிசேஷ ரத்தினம் தலைமையில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நேற்று காலை 8:30 மணிக்கு துவங்கியது. சத்தி ரோடு, அவிநாசி ரோடு, சர்ச் வீதி வழியாக மீண்டும் சத்தி ரோட்டில் ஆலயத்தில் ஊர்வலம் முடிந்தது.
ஊர்வலத்தில், கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி, ஓசன்னா பாடல்களை கிறிஸ்தவர்கள் பாடியபடி வந்தனர். இதையடுத்து சிறப்பு பிரார்த்தனை காலை 9:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடந்தது. திரளானவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், திருச்சபை செயலாளர் பிரேம் தேவா, பொருளாளர் லிவிங்ஸ்டன், நிர்வாகிகள் தினகரன், ஸ்மித், லெஷிதா, ஜூலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

