/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் புத்தகங்களால் ஏணிப்படிகள்!
/
கலெக்டர் அலுவலகத்தில் புத்தகங்களால் ஏணிப்படிகள்!
ADDED : மே 26, 2024 12:37 AM

கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. ஒரே ஒரு நுழைவாயில் இருப்பதால், அரசு துறை ஆய்வு கூட்டங்கள் நடத்தும்போது, வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. அதனால், அக்னி மூலையில் புதிதாக ஒரு நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஜூன் 4ல் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், நன்னடத்தை விதிமுறைகள் தளர்வு செய்யப்படும். அதன்பின், நுழைவாயிலை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
நுழைவாயில் இருபுறமும், பசுமை புல்வெளி ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களை கவரும் வகையில் சிற்பங்கள் வடிக்கப்பட்டு இருக்கின்றன.
'புத்தகங்களே உயர்வதற்கான ஏணிப்படிகள்' என்ற வாக்கியத்துக்கு பொருள் கொடுக்கும் வகையில், அடுக்கடுக்காக புத்தகங்கள் ஏணி போல் இருப்பது போலவும், அதன் உச்சியில் அமர்ந்து ஒரு சிறுவன் புத்தகம் வாசிப்பது போலவும், இன்னொரு சிறுமி தனது இரு கைகளையும் வீசிக்கொண்டு, வான்வெளியின்உச்சத்தை சந்தோசத்தில் பார்ப்பது போலவும், சிற்பங்கள் வடிக்கப்பட்டு இருக்கின்றன.
மற்றொரு பகுதியில், நிலத்துக்குள் இருந்து ஒரு செடி முளைத்து வளர்ந்து படர்வதை போலவும், இரு கரங்கள் அரவணைப்பது போலவும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
கலெக்டர் அலுவலகத்துக்கு வருவோரை ஈர்க்கும் வகையில், இச்சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
அரசு அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்திய பிறகே, கலெக்டர் அலுவலக புதிய நுழைவாயில் திறக்கப்படும். இருபுறமும் அமைத்துள்ள சிற்பங்களில், சின்ன சின்ன வேலைகள் நிலுவையில் உள்ளன.
'மழையால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன; விரைவில் முழுமையாக முடிக்கப்படும்' என்றனர்.