/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து... சுற்றுச்சூழல் காப்போம்! குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு
/
50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து... சுற்றுச்சூழல் காப்போம்! குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு
50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து... சுற்றுச்சூழல் காப்போம்! குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு
50 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து... சுற்றுச்சூழல் காப்போம்! குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு
ADDED : ஜூன் 01, 2024 01:18 AM

கோவை;உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில், 27 ஏக்கர் நிலப்பரப்பில், இன்று (ஜூன் 1) ஒரே நாளில், 5,000 மரக்கன்றுகள் நடும் களப்பணி நடைபெறுகிறது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, குளம், குட்டைகளை மீட்டெடுக்கும் பணியில், ஈடுபட்டு வருகின்றனர்.
சில தனியார் நிறுவனங்கள், சமுதாய பொறுப்பு நிதியை நீர்நிலைகளை மீட்டெடுக்க வழங்கி வருவதால், இம்முயற்சி வெற்றியுடன் பயணமாகிறது. சமீபத்தில் துார்வரப்பட்ட குட்டைகளில் மழை நீர் தேங்கியதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
இதன் அடுத்த கட்டமாக, ஒரே நேரத்தில், 5,000 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கியிருக்கிறது. மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில், 27 ஏக்கர் பரப்பளவில், மரக்கன்றுகள் இன்று (ஜூன் 1) காலை, 9:00 மணி முதல், நடவு செய்யப்படுகின்றன.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கூறியதாவது:
கோவையில் செழித்து வளர்ந்திருந்த மரங்களை இழந்ததால், பருவ மழை காலங்கள் தவறுகின்றன. 'சில்லென்ற கோவை' என்கிற அந்தஸ்தை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக சுட்டெரித்த சூரியனால், மக்கள் பட்ட அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல.
தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதனால், மரக்கன்று நடும் நிகழ்வு, முன்னெடுக்கப்பட்டு உள்ளது. அரபிக் கடலில் உருவாகும் தென்மேற்கு பருவக் காற்று, கோவைக்குள் பாலக்காட்டு கணவாய் வழியாக நுழைகிறது.
அந்த கணவாய் பகுதியில், சுந்தராபுரம் - மதுக்கரை ரோடு மத்தியில் உள்ள பிள்ளையார்புரத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால், சில்லென்ற சீதோஷ்ண நிலை, சுத்தமான காற்று வரும் தலைமுறைக்கு கிடைக்கும்.
குறுவனம் உருவாகி, மேகங்கள் ஈர்க்கப்படும்; நிலத்தடி நீர் உயரும்; பறவைகள், விலங்குகள் வருகை தரும்; நல்ல ஒரு உயிர்ச்சூழல் ஏற்படும்.
இன்று நடைபெறும் மரக்கன்று நடவு நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் அதிகமாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

