/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டாயம் ஓட்டு போடுவோம்.. எல்லோரும் இந்நாட்டு மன்னர்! நாம் தான் 'கிங் மேக்கர்'
/
கட்டாயம் ஓட்டு போடுவோம்.. எல்லோரும் இந்நாட்டு மன்னர்! நாம் தான் 'கிங் மேக்கர்'
கட்டாயம் ஓட்டு போடுவோம்.. எல்லோரும் இந்நாட்டு மன்னர்! நாம் தான் 'கிங் மேக்கர்'
கட்டாயம் ஓட்டு போடுவோம்.. எல்லோரும் இந்நாட்டு மன்னர்! நாம் தான் 'கிங் மேக்கர்'
ADDED : ஏப் 19, 2024 02:10 AM

அது வயது முதிர்ந்தோர் வாழும், 'கேட்டடு கம்யூனிட்டி' குடியிருப்பு. ஏதோ தன்னார்வ அமைப்பு நடத்தும் முதியோர் இல்லம் இல்லை. ஒவ்வொரு வீடும் ஒரு கோடி, ஒன்றரை கோடி ரூபாய் என்று மதிப்பு மிக்க வீடுகள்; பசுமையான மரங்கள், பளிச்சிடும் சாலைகள், அழகான பூங்கா, அடக்கமான குளிரூட்டப்பட்ட அரங்கம், ஒரு பல்பொருள் அங்காடி என அத்தனை வசதியும் அங்கே இருக்கிறது.
அமைதியான சூழல், எழிலான வாழ்விடம் என்று தனித்துவமாகவுள்ள அந்த குடியிருப்பில் வாழ்வோர் அனைவருமே, பல்வேறு உயர் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்; வெளிநாடுகளில், வெளி மாநில நகரங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி, வாழ்வின் இறுதிக்காலத்தை, நம் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறையுடன் கழிக்க வேண்டுமென்ற ஆசையில் இங்கு வீடு வாங்கிக் குடியேறியவர்கள்.
இவர்களுடைய குழந்தைகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் அல்லது வெளிமாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வருவது அபூர்வம். அதனால் இங்குள்ள குடியிருப்புக்குள் வாழ்வோர் தான், ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த வாரத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்த சூழ்நிலையில், இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, தேர்தலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அங்கு இருக்கும் பெரும்பாலானவர்களின் கருத்துகளும், ஒரு கட்சிக்கு ஆதரவாக குறிப்பாக ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. அவருக்கு தான் நம் ஓட்டு என்று ஆணித்தரமாக பேசிக் கொண்டனர். வெளியாள் ஒருவர் வந்து சொல்லும் வரை, அவர்களில் யாருக்குமே, தாங்கள் ஆதரிக்கும் அந்த வேட்பாளர், பக்கத்துத் தொகுதியில் நிற்கிறார்; இது வேறு தொகுதி என்பதே தெரியவில்லை.
அதை விடக் கொடுமை, அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலிலேயே இல்லை. இது தான் இன்றைக்கு நாட்டைப் பற்றி அக்கறையோடும், ஆவேசத்தோடும் பேசும் பலரின் உண்மை நிலையாகவுள்ளது. ஊழலைப் பற்றி உரக்கப் பேசுவார்கள்; சமூக ஊடகங்களில் சகட்டு மேனிக்கு சாடுவார்கள்; ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க மட்டும் முயற்சி எடுக்கமாட்டார்கள்.
எல்லா வாய்ப்புகளும் முடிந்தபின்பு, அடுத்த முறையாவது பெயரைச் சேர்க்க வேண்டுமென்று கங்கணம் கட்டுவார்கள்; தேர்தல் முடிந்தபின், அதை மறந்து விடுவார்கள். அப்படியே பெயர் இருந்தாலும், தேர்தல் நாளில், காலையில் போவதா, மாலையில் போவதா, எப்போது வெயிலும் கூட்டமும் குறைவாக இருக்கும், வரிசையில் ரொம்ப நேரம் நிற்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டே வீட்டில் இருப்பார்கள்.
அவர்கள் போகும் நேரத்தில் நீண்ட வரிசை இருந்தால், இந்தக் கூட்டத்தில் எவ்வளவு நேரம் நிற்பது என்று திரும்பிவிடுவார்கள். தனிக்குடியிருப்புகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மேல் தட்டு மக்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட நகரவாசிகள் பெரும்பாலானவர்கள், இப்படித்தான் தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்வதை, ஜனநாயகக் கடமை என்றே நினைப்பதில்லை.
நேர்மையை, வளர்ச்சியை விரும்பும் நகர வாசிகள், ஓட்டே இல்லாமல் அல்லது ஓட்டுப்போடாமல், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் சாடுவதில் அர்த்தமும் இல்லை; அதற்கு அவர்களுக்குத் துளியும் தகுதியும் இல்லை. இன்றைக்குத் தெரிந்து விடும், கோவை நகரவாசிகளின் உண்மையான சமூக அக்கறை!
பிறப்புரிமை
நமது நாட்டின் பிரதமரை, பார்லிமென்டில் சட்டம் இயற்றுபவர்களை தேர்வு செய்யும் தேர்தல் இது. ஜனாதிபதியானாலும், பிரதமரானாலும், சாதாரண குடிமகன் ஆனாலும், அனைவருக்கும் ஒரே ஒரு ஓட்டு தான். நாம் செலுத்தும் ஓட்டுரிமை ஒரு எம்.பி.,யை, ஒரு பிரதமரை, அமைச்சர்களை தேர்வு செய்ய உதவுகிறது.
நமது தொகுதியை மட்டுமின்றி, ஒரு தேசத்தை கட்டமைக்க உதவுகிறது. எனவே, ஒவ்வொரு வாக்காளரும் இந்நாட்டு மன்னர்களே. ஒரு நாட்டின் உயரிய பதவியான பிரதமரை தேர்வு செய்யும், கிங் மேக்கரும் நாம் தான். எனவே, ஓட்டுரிமை நமது பிறப்புரிமை. கட்டாயம் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுவீர்...
-நமது நிருபர்-

