/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மெட்ரோ திட்டத்துக்கு கடனுதவி; ஆசிய வங்கி அதிகாரிகள் இன்று கள ஆய்வு
/
கோவை மெட்ரோ திட்டத்துக்கு கடனுதவி; ஆசிய வங்கி அதிகாரிகள் இன்று கள ஆய்வு
கோவை மெட்ரோ திட்டத்துக்கு கடனுதவி; ஆசிய வங்கி அதிகாரிகள் இன்று கள ஆய்வு
கோவை மெட்ரோ திட்டத்துக்கு கடனுதவி; ஆசிய வங்கி அதிகாரிகள் இன்று கள ஆய்வு
ADDED : ஜூலை 03, 2024 03:47 AM

கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள், கோவையில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளாவில் கொச்சியில் மெட்ரோ ரயில், ஆறாண்டுகளாக இயங்கி வரும் நிலையில், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் மெட்ரோ மற்றும் லைட் மெட்ரோ திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டுமே, தற்போது மெட்ரோ ரயில் செயல்படுகிறது.
கோவை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 2011ல் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், 13 ஆண்டுகள் ஆகியும், இன்னும் திட்டப்பணிகள் துவங்கவேயில்லை. இதற்கிடையில், மதுரை நகரமும் இத்திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு, இரு நகரங்களுக்கும் தனித்தனியாக விரிவான திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டம், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் ஒப்புதல் மற்றும் நிதியைக்கோரி, கடந்த பிப்., 19ல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவி எப்போது கிடைக்குமென்பது உறுதியாகாத நிலையில், பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியை, தமிழக அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, ஜெர்மன் நாட்டின் கே.எப்.டபிள்யு பன்னாட்டு வங்கியிடம் நிதி கோரப்பட்டது. திட்ட அறிக்கை தயாரிக்க நிதியுதவி வழங்கிய இந்த வங்கி, இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, நிதியுதவி அளிக்க மறுத்துவிட்டது. கோவையில் உயர் மட்டப்பாதையாகவும், மதுரையில் பூமிக்கடியிலும் தடம் திட்டமிடப்பட்டதே இதற்குக் காரணம்.
மொத்தம் 119 கி.மீ., துாரம் கொண்ட சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு ரூ.63, 246 கோடி செலவாகுமென மதிப்பிடப்பட்டு, மத்திய அரசிடம் 50 சதவீத நிதிப்பங்களிப்பு கோரப்பட்டுள்ளது.
அங்கிருந்து இதுவரை சாதகமான பதில் வரவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு, மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவுள்ளது.
கோவையில் அவினாசி ரோடு மற்றும் சத்தி ரோடு ஆகிய இரு வழித்தடங்களில், முறையே 17.4 கி.மீ., மற்றும் 16 கி.மீ., என மொத்தம் 39 கி.மீ., துாரத்துக்கு, 32 ஸ்டேஷன்களுடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழித்தடத்துக்கு 35 ஏக்கர், பணிமனைக்கு 38 ஏக்கர் என, 73 ஏக்கர் கையகப்படுத்த வேண்டும்; உயர்மட்டப்பாதை 13லிருந்து 20 மீட்டர் உயரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு, 10,740 கோடியும், மதுரையில் பூமிக்கடியில் தடம் அமைவதால், 11,368 கோடியும் தேவை என்று மதிப்பிடப்பட்டு, மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கு, ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் தமிழக அரசு கடனுதவி கோரியுள்ளது.
இதை ஏற்று, இந்த வங்கியின் பிரதிநிதிகள், கோவையில் கள ஆய்வு மேற்கொள்ள, இன்று வருகை தரவுள்ளனர். மதுரையிலும் கள ஆய்வு மேற்கொண்ட பின், வரும் வெள்ளியன்று தமிழக அரசின் நிதித்துறை செயலரைச் சந்திக்கவுள்ளனர்.
அன்று வங்கி தரும் நிபந்தனைகளின் அடிப்படையில், இதற்கான நிதியுதவி கிடைக்குமா என்பது தெரியவரும்.
-நமது சிறப்பு நிருபர்-