/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மே தின கொண்டாட்டம்; தொழிலாளர்கள் கவுரவிப்பு
/
மே தின கொண்டாட்டம்; தொழிலாளர்கள் கவுரவிப்பு
ADDED : மே 01, 2024 11:12 PM

பொள்ளாச்சி : உழைக்கும் தொழிலாளர்களை கவுரவிக்கும் மே தினம், உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு பல அங்கீகாரங்கள் வழங்கப்பட்ட நாள் என்பதால், அனைத்து துறைகளிலும் பணியாற்றும்தொழிலாளர்கள் மே தினத்தை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடினர்.
* பொள்ளாச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை நிர்வாகிகள், உடுமலை ரோடு மின்மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் மே தினம் கொண்டாடினர். பேரவைத் தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். அங்குள்ள பணியாளர்களுக்கு மே தின சிறப்பு குறித்து தெரிவித்து, பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கப்பட்டது. புத்தாடைகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. கவிஞர் முருகானந்தம், கவுன்சிலர் சாந்தலிங்கம், இளைஞர் பேரவை நிர்வாகிகள் சுந்தர்ராஜ், அப்துல் ஹமீது, பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* பொள்ளாச்சி, உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனியில் மே தின கொடியேற்று விழா நடந்தது. ஆட்டோ சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கமிட்டி கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி கொடி ஏற்றினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர் தங்கவேல், தி.மு.க., நகர பொருளாளர் ஆகிமூர்த்தி, ஆட்டோ சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
* பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி அருணாச்சலம் தீப்பெட்டி தொழிற்சாலையில் மே தினம் கொண்டாடப்பட்டது. ஐ.என்.டி.யு.சி., மாநில தலைவர் முனுசாமி, மாநில செயலாளர் வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தொழிற்சாலையில் பணிபுரியும், பெண்கள், ஆண்கள் என, 25 பேர், தொழிற்சங்கத்தில் இணைந்தனர். வக்கீல் செல்வகுமார், வட்டார தலைவர் அமிர்தராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் தென்னரசு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* பொள்ளாச்சி பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொறுப்பு சகோதரி பிரவீனா தலைமை வகித்தார். தொடர்ந்து, அங்கு பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கிரீடம் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

