/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருக்கல்யாண உற்சவத்தால் தெய்வப்பேரருள்!
/
திருக்கல்யாண உற்சவத்தால் தெய்வப்பேரருள்!
ADDED : மார் 04, 2025 10:10 PM

மாரியம்மன் திருவிழாவின் தேரோட்டத்துக்கு முன்னதாக, திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
எல்லோரையும் படைத்த தெய்வங்களை, பெற்றோராக பாவித்து, திருக்கல்யாண உற்சவங்களை நடத்திப் பார்த்து, தெய்வங்களின் பேரருளைப் பெறுகிறோம். அப்படி பெறுவதற்காகவே ஆகம விதிகளில் திருக்கல்யாணம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
தெய்வங்களுக்கு நடத்தும் திருமணங்கள் பெரும்பாலும், நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமண வைபவம் போலவே பல்வேறு சடங்குகளுடன் நடைபெறுவதைக் காணலாம்.
முளைப்பாலிகை, காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல், கோத்திரப்பிரவரம், ஹோமங்கள், கன்னியாதானம், திருமாங்கல்ய தாரணம், திருவீதி வலம் போன்ற திருமண சடங்குகளின் வரிசைகள், தெய்வத் திருமணங்களிலும் பின்பற்றப்படுகிறது.
உலகத்தார் நன்றாக இருப்பதற்கு இந்த மாங்கல்யதாரணம் நடப்பதாக மந்திரங்கள் வாயிலாக கூறப்படுகிறது.திருக்கல்யாணம் நடைபெற்றால் அந்த தெய்வ தம்பதிகளின் பேரருள் எல்லோருக்கும் கிடைத்து, எல்லோரும் நன்றாக வாழ்வார்கள் என்பதற்காக ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்களை நடத்துகின்றோம்.
அந்த வகையில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தேர் திருவிழா நாளில் காலையில், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். சீர் வரிசைகள் வரிசையாக வைத்து, பூஜைகள் நடத்தப்படும். வழக்கமான சம்பிரதாயங்கள், பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், மஞ்சள் இடிக்கப்படும். தொடர்ந்து, அம்மனுக்கும், சூலத்தேவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
அம்மனின் திருக்கல்யாண வைபவத்தை காண உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள், திரளாக பங்கேற்று கண்டுகளிப்பர்.
திருக்கல்யாணம் முடிந்த பின்னர், பெண்களுக்கு மாங்கல்ய சரடு, மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். மாங்கல்ய சரடு வாங்க பெண்கள் ஆர்வம் காட்டுவர். பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த மாங்கல்ய சரடுகளை, பெண் பக்தர்களுக்கு வழங்குவர்.
மாரியம்மன் கோவில் திருவிழாவில், முக்கிய நிகழ்வாக அம்மன் திருக்கல்யாணம் நடத்தப்படுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.