/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய வங்கி அதிகாரிகள் கோவையில் ஆய்வு! சென்னையில் நிதித்துறை செயலருடன் நாளை சந்திப்பு
/
மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய வங்கி அதிகாரிகள் கோவையில் ஆய்வு! சென்னையில் நிதித்துறை செயலருடன் நாளை சந்திப்பு
மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய வங்கி அதிகாரிகள் கோவையில் ஆய்வு! சென்னையில் நிதித்துறை செயலருடன் நாளை சந்திப்பு
மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய வங்கி அதிகாரிகள் கோவையில் ஆய்வு! சென்னையில் நிதித்துறை செயலருடன் நாளை சந்திப்பு
ADDED : ஜூலை 04, 2024 05:11 AM
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக, ஆய்வு மேற்கொள்வதற்கு ஆசிய வங்கி அதிகாரிகள், கோவைக்கு இன்று வருகை தரவுள்ளனர்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் உள்ளது. இதற்கான ஒப்புதலும், நிதியும் கோரி இந்த அறிக்கை, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து பதில் எதுவும் வராத நிலையில், இத்திட்டத்துக்கு கடனுதவிக்காக பன்னாட்டு வங்கிகளை தமிழக அரசு அணுகி வருகிறது.
சென்னை முதல்கட்ட மெட்ரோ திட்டத்துக்கு நிதியுதவி செய்துவரும் ஆசிய உள் கட்டமைப்பு முதலீட்டு வங்கி, இரண்டாம் கட்ட மெட்ரோ, கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கும் நிதியுதவி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு ஆய்வுக்கு வந்த இந்த வங்கியின் குழு, மதுரை மற்றும் கோவையிலும் ஆய்வு மேற்கொள்கிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக, காலமுறை ஆய்வுக்காக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் குழு, சென்னை வந்துள்ளது.
இதே வங்கி, கோவை, மதுரைக்கும் நிதியுதவி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் குழுவுடன் இணைந்து, கோவையில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.
கோவையில் ஜூலை 4 (இன்று) இந்த குழு, ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யு-கு, தலைமை பொது மேலாளர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) ரேகா பிரகாஷ், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதில் பிற பன்னாட்டு வங்கிகளும், ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனாலும், மத்திய அரசின் நிதி அமைச்சகம் தான் நிதி நிறுவனத்தை சரியான நேரத்தில் முடிவு செய்யும்.
சர்வதேச அளவில் நிதியுதவி பெறுவதற்கான அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடந்த மார்ச் மாதத்திலேயே, தமிழக அரசால் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இன்று கோவையில் இந்தக் குழுவினர் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். ஆய்வுகளின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் நிதித்துறை செயலரை, இக்குழுவினர் சென்னையில் நாளை சந்தித்துப் பேசவுள்ளனர்.
ஆசிய வங்கி நிதியுதவி அளிக்க ஒப்புக் கொண்டாலும், மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதி பங்களிப்பின் அடிப்படையில்தான், இத்திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும்.