/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலக்குது கழிவுநீர்; அதிகரிக்குது ஆகாயத்தாமரை
/
கலக்குது கழிவுநீர்; அதிகரிக்குது ஆகாயத்தாமரை
ADDED : மே 12, 2024 11:12 PM

அன்னுார்:அன்னுாரில் உள்ள 119 ஏக்கர் குளத்தில், கழிவு நீர் கலப்பதாலும், ஆகாயத்தாமரை அதிகரிப்பதாலும் குளம் மாசுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 119 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையாலும், அத்திக்கடவு திட்டத்தாலும், 50 சதவீதம் அளவுக்கு நீர் சேர்ந்துள்ளது. எனினும் குளத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து குளத்திற்குள் தினமும் பல ஆயிரம் லிட்டர் கழிவு நீர் கலப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வார சந்தை, பஸ் ஸ்டாண்ட் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து கழிவுநீர் குளத்தில் கலந்து குளத்து நீரை மாசு படுத்தி வருகிறது.
இத்துடன் இரவு நேரத்தில் பலர் கழிவுகளை குளத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். தற்போது குளத்தில் 25 சதவீத பரப்பளவில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், '10 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னுார் குளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் நீர் சேர்ந்துள்ளது. ஆனால் குளத்தில் சேர்ந்துள்ள நீர் பயன்படுத்தப்பட முடியாதபடி கழிவுநீர் கலக்கிறது, குப்பை கொட்டப்படுகிறது. ஆகாயத்தாமரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரித்து குளத்தில் கலக்கும்படி செய்ய வேண்டும். குளத்தில் குப்பை கொட்டாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.